உனக்காக ஒரு மடல்

(வெள்ளம் சொன்ன பாடத்திலிருந்து ...)
ஊழல் செய்தவர்களும்
ஊர்க் காசைத் தின்றவர்களும்
என்ன செய்திருப்பார்கள்?
ஒரு வேளை இன்பச் சுற்றுலா சென்றிருக்கலாம் அல்லது
மொட்டைமாடிகளில் ஒளிந்து அறைவாசம் செய்திருக்கலாம்.
உனது நிலை தான் என்ன?
சற்று சிந்தனை செய்து பார்த்தாயா?
உனது நடிகனின் படத்துக்கு
குடம் குடமாய் பாலாபிஷேகம் செய்தாயே!
உன் குழந்தைக்கு ஊட்ட ஒரு குவளைப் பால் கிடைத்ததா?
வாழ்க வாழ்க என்று வாய் வலிக்கக் கத்தினாயே!
எந்த அரசியல் தலைவன் உனக்கு
இன்று வாழ்க்கை கொடுத்துவிட்டான்?
என் மதம் என் மதம் என்று மார்தட்டிக் கொண்டாயே!
அவன் மதமும் அவள் மதமும் அல்லவா
உனக்கு இதமும் இடமும் தந்தது!
சாதிக்கொரு சங்கம் வைத்து மேடையெல்லாம் கத்தினாயே!
எந்த சாதி உனக்கு உயிர்ப் பிச்சைக்
கொடுத்ததென நினைவில் இருக்கிறதா?
அடடா!
ஒரு நாட்டின் தலைவன் செய்யாததை
ஒரு நாள் மழை செய்துவிட்டதே!!
இயற்கையைப் பார்!
அது உன்னை அழித்து ஒழிக்கப் பார்ப்பதில்லை!
அடித்துத் திருத்தத்தான் பார்க்கிறது!
நீ தான் வருந்துவதுமில்லை,
திருந்துவதுமில்லை!
உன் பச்சிளங்குழந்தையின் முகம் பார்த்து தான்
பசுவின் மடியும் பால் சுரக்கிறது!
ஏழை உழவன் காலைத் தொட்டுத்தான்
நெற்கதிரும் கற்பம் சுமக்கிறது!
இயற்கையை நேசி! சுற்றத்தை நேசி!
ஊரழிந்த நேரத்தில் உயிரைக் கொடுத்து
மீட்டவரை உயிருள்ளவரை வாசி!
ஏனெனில்,
பணம் அப்போது உனக்குப் பணியாற்றவில்லை.
அப்போதும், அதில் இருந்த காந்தித் தாத்தா
சிரித்துக்கொண்டுதான் இருந்தார்!