காதல் மருத்துவம்

காதலில் தொலைந்துவிடும் நேரம் - ஒரு
கத்தியின்றி இரத்தமின்றி இதயம் இடம் மாறும்
இடப்பக்கம் இதயத்தின் இடமாம் - மறுத்தேன்
அவள் இருக்கின்ற இடமெல்லாம் - என்
இதயம் வலம் வருமாம்
உறுதியான உன் இதயம் என் உடலினில் துடிப்பதினால்
குருதி நாளங்களும் கும்மியிட்டு கும்மாளம் போடுதடி
பரிதி கண்டு உருகிபோகும் பனித்துளிகள் போலவே
சிறிது சிறிதாய் அடைப்பு நீங்கி குருதி சீராய் ஓடுதே
வட்ட நிலவு போலே நீ எட்ட நின்று தோன்றும் போதும்
கிட்டப்பார்வை குறையை கூட கண்களெல்லாம் மறந்து போகும்
தூரத்திலே உன் உருவம் துளி நேரம் மறைந்து விடின் - கண்களும்
பாரமாக முகத்தில் சுமக்க மூக்கு கண்ணாடியை தேடி மேயும்
சிந்தையிலே உன் நினைவை சிதறவிடும் நேரத்தில்
சிலிர்ப்பூட்டும் மெல்லியதொரு மின்சக்தி நரம்பெல்லாம்
சீரிப்பாய்ந்திடுதே இதன் பெயர்தான் நரம்பு யோகா பயிற்சியோ
காதலும் யோகாதான் காதலிப்பவன் யோகக்காரன் தான்
செவிக்கு உணவில்லா போது சிறிது வயிற்றுக்கும் உணவிடு
கவிக்கு சக்கரவர்த்தி கடவுள் இணை வள்ளுவரும் கூறிவிட்டார்
என் விழிக்கு உன் காட்சி உணவாகாவிட்டால் - வயிற்று
குழிக்கும் செவிபறைக்கும் இங்கு பசியே இல்லை..