காதல் என்னவோ சுகமானது

படபடக்கும் - அவள் கண்களில் மலர்ச்சி -
என் மனதை அள்ளும் .
பூக்கும் சிரிப்போ - அவள் இதழ்களை
கிள்ளச் சொல்லும் .
சிவந்த இதழால் - அவள் உச்சரிக்கும்
ஒவ்வொரு சொல்லும்,
என்னை அப்படியே - மௌனித்துக் கொல்லும் !
பலமுறை காத்திருந்து -
நானே என் பொறுமையை
சோதித்திருக்கிறேன் .
அவளைத் தீண்டிய காற்றை -
என்னைத் தீண்டச் சொல்லி
யாசித்திருக்கிறேன் .
அவள் கோபப் பார்வையில்
சேதாரமில்லாமல் -
குளித்திருக்கிறேன் .
முயற்ச்சியை அன்றாடக்
கடமையாய் செய்தேன்.
முயன்று -
என் கவிதையை நான் சொன்னபோது...
அவளின் -
சிவந்த முகம் - வெட்கத்தை
மேலாடை ஆக்கியது !
வளையல்கள் மோதி ஆர்பரித்தன !
வளைக்கரமோ,
முகத்தாடைக்கு ஊன்று கோலானது !
நீலக் கண்கள் - உச்சரிக்கும்
என்னை, விழிக் கீற்றுகளால்
ஆராய்ந்தன !
என் வார்த்தைகள் - பார்வையின்
வசீகரத்தால் தடம் புரண்டன !
கவிதை நின்றது - பரவசம்
என்னைத் தொட்டது .
அவள் மூச்சுக் காற்று
என்னை வருடியதால் - நான்
இமை மூடினேன் !
கன்னத்தில் அவள் -
இதழின் மெல்லிய பதிவு...!
என் முகம் - ஸ்பரிசத்தின்
வெப்பத்தால் நீர் பூத்தது !
அந்தக் கணம் -
வானவில்லைக் கண்டேன் !
வண்ணத்துப் பூச்சிகள் விசிறின !
வெண் பனி போர்வையானது !
விண்ணில் நடந்து கொண்டிருந்தேன் !
மகிழ்ச்சி என்னைத் தாலாட்டியது !
இதயத் துடிப்பு அர்த்தமானது !
இதுவா - காதல் !
தெரியவில்லையே - புரியவில்லையே.
தொடருமா - வாழ்க்கைச்
சுவற்றில் படருமா
தெரியாது - ஆனால்....
ஆனால் -
காதல் என்னவோ... சுகமானது !!!