எங்கிருந்து தொடங்குவது

நான்
திசைகள் தீர்ந்து போன
தேசாந்திரி

நீயோ
கிழக்கின் ஊற்றுக்கண்
என் வாசல் வந்துன்
வானம் கொஞ்சம்
தெளித்துப் போயேன்

நீயோர்
அமுதக்கலசம்
நானோ
ஒற்றைத்துளி
பருகிச் சிலிர்க்கும்
சிற்றெறும்பு

ஒற்றை இரவுக்குள்
விண்மீன்கள் யாவற்றையும்
எண்ணிவிடத் துடிக்கும்
அறியாச் சிறுவனாய்
உன் காதலும் நானும்

நானின்றேல்
நதியில்லைஎனும்
கர்வப் பொய்மையுள் கரைந்த
கரை நான்

கடலாய் இருந்தும்-
அலைத் தாலாட்டில்
மணல்வெளி மகவை
உறங்கச் செய்யும்
அன்னை நீ

எங்கிருந்து தொடங்குவது-
என்னை?
நீயே முடிவெடு .

எழுதியவர் : (1-Jan-16, 2:39 pm)
பார்வை : 207

மேலே