வாழ்வின் விடை

இருபதாம் நூற்றாண்டை இரண்டாகப் பகுத்திட்டு


முதல்பாதி முடியும் நாளில் * 31/12/1949


கருவிட்டு உருப்பெற்று கலியாளு மிவ்வுலகில்


கால்தடம் நான் பதித் தேன்,





ஓரைந்து ஆண்டுகள் தாய்தந்தை மடிமீது


கவலையறி யாமல் தவழ்ந் தேன்.


ஈரைந்து* ஆண்டுகளாய் பள்ளிகள் பலசென்று * 2*5=10


பாடங்கள் பலவும் பயின்றேன்.





வேறைந்து ஆண்டும் அதனோடு ஓரிரண்டும் * *5+2=7years of engineering


பொறியியல் கற்றுத் தேர்ந்தேன்.


ஆறேழு** ஆண்டுகளாய் இங்கோடி அங்கோடி ** 6*7=42 years of work


அலுவல்கள் செய்திளைத் தேன் .





நாடுகள் பலசுற்றி நகர் பலவும் வலம் வந்து


ஓடோடி மூச்சிரைத் தேன் .


ஏடுகள் பலபடித்தும் அனுபவத் தோல் தடித்தும்


தலையும் மனதும் நரைத்தேன்.





கடிவாள மிட்டுப்பின் கண்திரையும் போட்டபின்


ஒருதிசையே நோக்கும் புரவி -அதுபோல்


அடிவானம் தொட எண்ணி தொழிலொன்றே குறிஎன்று


கிணற்றி ட்ட தவளை ஒத்தேன்.





வீடுமனை வாங்குவதும் வங்கிப்பணம் தேங்குவதும்


வாழ்க்கையின் வெற்றி என்றால்


தேடுமவ் வெற்றியென் வசம்வந்து சேர்ந்ததென


தீர்வாகச் சொல்லிவிட லாம்.





ஆயினும் இப்பொழுதில் அடிமனதில் ஒருசிறிது


உளைச்சல் உறுத்தி வருதே!


போய்விட்ட நாட்களெல்லாம் பயனின்றிப்


போயினவோ என்ற ஒரு எண்ணம் எழுதே!





ஆறைந்து* ஆண்டுகளாய் தசை நரம்பு எலும்பான * 6and5=65;


உடலை வுயிரால் நிறைத்தேன்.


ஆராய்ந்து பார்க்கையிலே வேறெந்த சாதனையும்


இல்லையென எண்ணித் திகைத்தேன்!





மைந்தரிரு வரைப்பெற்று கற்பித்து மணமுடித்து


என்கடமை ஆற்றினேன் அல்லால்


சொந்தங்கள் சுற்றங்கள் என்ற ஒரு வட்டம் விட்டு


சிறிதும் வெளிச் சென்றே னில்லை.





வித விதமாய் விஞ்ஞானத் தொழில்நுட்பக் கேள்விகளின்


விடைகண்டு வாழ்த்துப் பெற்றேன் - ஆயின்


இதயத்தில் மெய்ஞானம் பெற்றேனா ? இல்லையென


இன்றதனை நானு முணர்ந் தேன்.





தவறான கேள்விகளை தினம்தினமும் கேட்டதற்கு


சரியான பதிலும் சொன்னேன்.


இவ்வுலக வாழ்க்கைஎனும் விடுகதையின் விடை என்ன


இக்கேள்வி கேட்க மறந்தேன்.





இந்தநாளில் தொடங்கி இக்கேள்வி விடைபெறவே


இடைவிடா முயற்சி செய் வேன்- உடல்


வெந்த நாள் வருமுன்னே நல்லறிவு நேர்ந்திடவே


கந்தவேள் அருள் புரிகவே.





அறுபடையில் குடிகொண்டு அடியவர்க் கருள்புரியும்


அறுமுகக் குமர வேளே!


சிறியவனென் சித்தக் குழப்பங்கள் நீங்கிடவே


நல்லருள் புரிக நீயே!

எழுதியவர் : ரமேஷ் ( கனித்தோட்டம்) (1-Jan-16, 4:26 pm)
பார்வை : 78

சிறந்த கவிதைகள்

மேலே