காட்சிகளில் பிழையா சாட்சிகளில் பிழையா == யாமறியோம் பராபரமே - - - சக்கரைவாசன்

காட்சிகளில் பிழையா சாட்சிகளில் பிழையா -- யாமறியோம் பராபரமே
**********************************************
அஞ்சன மையிட்ட கயல் ஒத்த விழியுற்ற
மிஞ்சும் சிவப்பழகி காஞ்சனா அவள் பெயராம்
பஞ்சமிலா பிரதேசங்கள் பாதாதி கேசம் வரை
வஞ்சியவள் தோற்றத்தில் சாஞ்சியின் தூண் ஆவாள் -- இக்
காட்சியதும் பிழையானால் மறு சாட்சி இல்லையடி !

மஞ்சப்பொடி தேய்த்த சொக்கவைக்கும் சீரழகு
காஞ்சிப் பட் டொதுக்கி இடையேற்ற நூலாடை
விஞ்சிடும் பார்வைகள் ஊஞ்சலாய் அன்னநடை
நஞ்சிலா மனங்கொண்ட அஞ்சாத சிங்கமடி -- இக்
காட்சியதும் பிழையானால் மறு சாட்சி இல்லையடி !

குஞ்சமதும் கார்முகிலாம் நுதலொட்டி நேர்வகிடாம்
பஞ்சொத்த பாதத்தாள் காந்தள்மலர் விர லுடையாள்
உறிஞ்சிடும் எண்ணத்தில் கீழ் அதர முத்துக்கள்
தஞ்சமென தவழ்ந்துவரும் புன்னகையும் அவளிடமே -- இக்
காட்சியதும் பிழையானால் மறு சாட்சி இல்லையடி !

குறிஞ்சி மலர் ஒத்த வாடாத அவள்தேகம்
விரிந்த தாமரையே அவளுற்ற முகபாவம்
சரியும் மேலாடை சரிசெய்யும் குணமுடையாள்
புரிந்தும் புரியாத புதிரான தோற்றத்தாள் -- இக்
காட்சியதும் பிழையானால் மறு சாட்சி இல்லையடி !

சின்ன இடை உடல் பேண விடை பகரும் கண் விழியாள்
பின்னலிட்ட கூந்தலிலே பிச்சிப்பூ நல் சூட்ட
கன்னங்கள் மாங்கதுப்பாம் ருசித்திடும் எண்ணத்தில்
முன்னகங்கள் கவர்ச்சியுறும் பின் கலன்கள் தாங்கிடவே -- இக்
காட்சியதும் பிழையானால் மறு சாட்சி இல்லையடி !

கள்ளமனம் கொள்ளாத கட்டழகுப் பதுமையவள்
தெள்ளமுதம் போல் ஆமே செவ் வாயின் உமிழ்நீரும்
கொள்வதற்கும் கொடுப்பதற்கும் ஏராளம் அவளிடமே
அள்ளிவிட இயலாத பேரழகுப் பேரரசி -- இக்
காட்சியதும் பிழையானால் மறு சாட்சி இல்லையடி !

கலையாத பொட்டிட்ட அலைபாயும் தோற்றத்தாள்
தலையாய நற் குணங்கள் தன்னகத்தே நல் கொண்ட
விலையாகா நிலையுற்று தலை சாய்க்கும் தமயந்தி
மலைபோன்று எதுவரினும் கலங்காத உள்ளத்தாள் -- இக்
காட்சியதும் பிழை ஆக மறு காட்சி இவனிடமே !

மலைத் தேன் அவளென்றே மலைத்தேன் என்னுள்ளே
விரித்தேன் மனச்சிறகை வானத்தில் பறந்துவிட
பறந்தேன் அக்கருடனாய் எண்ணத்தில் பரவசமாய்
அலைந்தேன் முனைந்தேன் களித்தேன் நல் அளைந்து -- இக்
காட்சியதும் பிழையானால் மன சாட்சி இல்லையடி !

மறந்தேன் நன் நெறிகள் என் பாதையதும் தடுமாற
நெறித் தேன் பலகற்றும் மறுத்தேன் அதன் வழிஏக
நெரித்தேன் குரல்வளையை அந் நெறிகள் மாய்வதற்கே
சிரித்தேன் மனதுள்ளே யானுற்ற நிலையெண்ணி -- இக்
காட்சியதும் பிழையானால் மன சாட்சி இல்லையடி !

மதுத் தேன் என்றெண்ணி பிணைந்தேன் அவளுடனே
பசித் தேன் படும் பாட்டில் காமமது சமைந்துவிட
புசித்தேன் பலவிதமாய் அச்சிற்றின்பப் பேரின்பம்
இனித்தாள் அவள்தானும் ஒரு காத தூரம்வரை -- இக்
காட்சியதும் பிழையானால் மறு சாட்சி இல்லையடி !

கரைத்தேன் நல் நிதியம் அதுவந்த வழியினூடே
இறைத்தேன் மெய் நீரை இரைத் தேனாய் அவளிடமே
பிரிந்தேன் அவள்தன்னை தொடர்வதற்கு வழியின்றி
துணிந்தேன் ஒருநாளில் நன் நெறிக்கு மீண்டிடவே - இக்
காட்சியதும் பிழை ஆகா மனம் ஆட்சி புரிந்ததடி !

பணித்தேன் புலன் ஐந்தை அடங்கியே அமர்ந்துவிட
பணிந்தேன் அவன்பாதம் நற் கதிக்கு ஏதுவாக
திறந்தேன் என் மனக்கதவை ஈசனவன் வருகைக்காய்
தனித்தேன் என் நிலையில் சர்வமும் சிவமென்றே -- இக்
காட்சியதும் பிழையின்றி மனமாட்சி கொண்டதடி !

எழுதியவர் : சக்கரைவாசன் (5-Jan-16, 11:30 pm)
பார்வை : 348

மேலே