வாழாவெட்டியானேன்
கட்டிய மனைவியின்
காதோரம் உறவாடி
காத்திரு வந்திடுவேன்
காசு பணம் திரட்டி
கர்ப்பவதி அவளை
கண்கலங்கவிட்டு
கடல்தாண்டி போனேன்
கடன்காரன் கடனடைக்க
பெற்றவளின் மடிச்சோறும்
பிடித்தவளின் கொலுசிசையும்
படுத்தெழுந்த திண்ணையும்
பரந்துவிரிந்த வயல்நிலமும்
நிழல் தந்த நாவல்மரம்
நெடிதுயர்ந்த தென்னைமரம்
காலாற நடைநடந்த
களனிகளும் புல்வெளியும்
நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்க
நெடுந்தூரம் கடந்து வந்தேன்
புதிரான மனிதர்கள்
புரியாத பாசைகள்
எலும்பையும் உருக்கும்
இரக்கமில்லா பனிமலைகள்
தனிமையின் வெறுமை
தாக்கும் இளமை
தொலைபேசி உறவாடும்
தொலைதூர உறவுகள்
எப்படியோ கடனடைத்து
ஏப்பம்விட்டு நிமிர்கையிலே
எட்டிப்பார்த்த நரைமுடிகள்
என்னை பார்த்து சிரிக்கிறது
கைநிறைய காசுண்டு
காணி பூமியும் உண்டு
கடந்து விட்ட இளமையும்
தொலைத்துவிட்ட இன்பங்களும்
கைகொட்டி சிரிக்குதடி
வாழும் வயதில் நீ
வாழாவெட்டியடா......