பெண் ஞானம்
பெண்களை அறிதல்
அத்தனை எளிதல்ல
பெண்களை சரியாகப்
புரிந்து கொள்ள
நாம்
இருட்டில் மட்டும் ஒளிரும்
சில நிறங்களைப் பற்றி
அறிந்து கொள்ளவேண்டும்
பார்க்காத பொழுதில்
தசைகளை இழுத்துண்ணும்
சில உடைகளைப் பற்றியும்
கொஞ்சம் அறிவு வேண்டும்
உதிரம் குடிக்கும்
சில மலர்களுடனாவது
அறிமுகம் வேண்டும்
ஒரே நாளில் உயிர்த்து உதிரும்
பட்டாம் பூச்சிகளைப் பற்றியும்
தெரிந்திருக்கவேண்டும்
மலை உச்சியில்
ஒளித்து உறையும்
சில பறவைகள்,
புதைகுழிகளில் கண் ஒளிரும்
சில விலங்குகள் பற்றியும்
தெரிந்திருப்பது நலம்
சருகுகளில் இருந்து
நாவில்
முதிர்ந்த நஞ்சுடன்
சட்டென்று
சீறி எழும்
சர்ப்ப வகைகள் பற்றியும் கூட
அறிய வேண்டும்தான்..
ஆனால்
இவையெல்லாம்
நம்மால் ஆகாது
என்றஞ்சி
விட்டுவிடக் கூடாது
ஏனெனில்
பெண்ணை அறிதலே
ஞானத்தின் ஆரம்பம்
என்பதை
நினைவில் கொள்ள வேண்டும்..
போகன் கவிதை ..