காட்சிப் பிழைகள் 31 - முரளி
இது இளமை தொடருமோ தொடருகையில்
-----உதிரவே விடியுமோ ஒருமுதிர்காலம்
அது இனிமை இனிமையிலே மூழ்கிடில்
-----விடைபெற ஏங்குமோ ஒருகாலம்
அன்று கனவதுபோல் கண்டதுமே கண்மயக்கம்
-----ஏதோ சொன்னதும் கேட்டிலனே மனமயக்கம்
உந்தன் விழிவீச்சில் வீழ்ந்ததிலே பிரமையில்
-----ஒரு வார்த்தையுமே உதவிடா தனிமயக்கம்
முட்கள் கீறியபோதும் வலியிலுமே மயங்கிய
-----பூக்கள் புன்னகைத்தே மெலிதாய்
பொய்யெனும் போர்வைக்குள்ளே மறைந்தே சில
-----நிஜங்களும் உறங்கினதே இனிதாய்
மனங்கள் லயிக்க குணங்கள் சங்கமிக்கையில்
-----காலங்கள் காட்சிகளைக் கலைத்தனவே
என் பிடிமானமில்லா பின்னிரவின் உறக்கத்தில்
-----பிடித்தமில்லா கனவுகள் துரத்தினவே
தேடித் தேடிய துரத்தல்களின் முடிவிலே
-----தொட்டதும் கலையும் குமிழ்களாய்
வாழ்க்கையின் வெட்கம் தொலைத்த நிலைகளே
-----வாழ்வென உணர்ந்த புரிதலாய்
இன்று வடிவம் வரிகளில் மறையும்
-----யாக்கைச் சுருக்கங்கள் சூழ்வனமோ
படிவங்கள் படிமானங்கள் மூடியே மறைக்கும்
-----பருவங்கள் தேய்ந்த மனமோ
வருடங்கள் வடிகால்களாய் ஓடிய பின்னர்
-----வரும் பகலும் இருட்டறைகளானதோ
ஒரு முடிவின் எதிர் நோக்கலில்
-----பல விடியல்கள் விழித்திருக்கலானதோ
மறைந்த நினைவுச் சாலையின் துகள்கள்
-----தடயங்களாய் மனதுள் ஓலமிடுதோ
நிறைய மவுனங்களிலும் இடையே அதுவும்
-----ஒர் இன்னிசையாய் மயக்கிடுதோ
புன்னைகைப் பூக்கள் தழுவ மறுக்கையில்
-----சோக முட்கள் சூழத்துடிக்குதோ
நிஜமென்னும் பார்வையில் தேடி வரும்
-----நிதர்சனங்களை மூடி மறைக்குதோ
வசந்தத்தின் வாசம் வடிந்தபின் வரும்
-----முதுமையின் பல தேடல்களாய்
உள்ளிருக்கும் உந்துதலில் ஒரு கேள்வி
-----காத்திருத்தல் சுகமோ சோகமோ...?
---- முரளி