காதலுக்கு மரியாதை
உன்
மனவாசல் எப்போதும்
திறந்த படியே தான் ...
எனக்கும் தெரியும் !
என் மௌனங்களையும்
உன் முற்றுப்புள்ளிகளையும்
மாவிலைத் தோரணமாய்
அங்கே கட்டி வை !
காதலை வரவேற்க .
என் கவிகளுக்கு நீ வீசும்
சாமரங்களாகவே
உன் விழிகள்
பூக்கள் தெளிக்கிறது
மனது விரிந்து வடிக்கிறது
என் உயிருறைந்த
உன் உருவ நிழல்களை
விழிகளில் பத்திரப்படுத்து
மீண்டு வந்து என் விழித்திரையை
விழுத்துகிறது
பூச்சருகாக நீ
மண்ணில் விழுந்து விடாமல்
உயிர் மரத்திலேயே
செருகி வைத்துள்ளேன்
காய்ந்து விட முடியாமல் அது
அதீத வாசனையை தருகிறது
என் நெஞ்சில் ஊறும்
ராகங்களை
வெறும் மழைத்தூறல்களாக
தெளிக்கிறது
உன் மேகத்துக்குள்
நீ ஏந்திக் குளிர்வாய் என்று
பாலை வனக் காயமாய்
இருக்கும் எனக்கு
உன் மன வெளியில்
நெருப்பை அணைக்கும்
நீராய் எப்படி இருக்க முடியும் ?
நேத்திரங்களின் ஒளியினால்
என் காதல் பாத்திரத்தில்
பிச்சையிடும் உனக்கு
அதனுள் நிறைந்திருப்பது
உன் நினைவுகள் என்பது
எப்படி தெரியாமல் போகும் ?
என் விழிகளுக்கு
இமைகள் நீ
ஏன் மூட மறுக்கிறாய்
ஒரு முறை
வெட்டித் துளிர்க்க விடு !
என் மேக மூட்டத்தில்
மழையும் வெயிலும்
வானவில்லாய் அடிக்கடி
வந்து மறைகிறாய்
என்னை நிறமூட்டி விட்டு .....
சமுத்திரமாய்
நிறைந்த காதல்
வற்றி நிலமாகுமா
இதயப் புதை குழியில்
அமிழ்ந்துள்ள நீ
மேலேறி புரக்கேறுமா ...
உன்னிடம் தவறிய
கைக்குட்டை என்னுள் .....
அதே கன்ன ஈரத்துவட்டலை
காய விடாது காத்திருக்கிறது
என் காதல் தென்றல் !
நான் புரண்டு படுக்கிறேன்
கவிதைப் பாயில் ...
இலக்கணமாய் நீ வந்து
எழுப்பி விடுகிறாய்
காதல் இலக்கியம்
மட்டும் பெரும்
காப்பியம் ஆனது
சுருக்கெழுத்து
போடச் சொல்கிறாய்
என் எழுத்து சுருக்கிட்டு சாகிறது !
விடிகாலை பனியில் என்
விழித்துளி கண்டு
உன் இதழ்கள் விரிகிறது
மென்மையாய் !
வாசத்தை என்னுள்
வீசிவிட்டுப் போகிறது
பூங்காற்று நலம் கேட்டு !
நான் அங்கே காணாமல்
போய் விடுகிறேன்
பிரமச்சாரியா நான்
உன் நினைவுகளுள்
புகுந்து வாழ்வை
நகர்த்துபவன்
எப்படி இருக்க முடியும்
என்னால் அப்படி
நீயும் பிரமச்சாரி தான்
என் நினைவுகளை
புதைத்துக் கொண்டு
இப்படித்தான் வாழும்
காதலென
வாழ்த்திக் கொண்டு
காதலுக்கு மரியாதை
செய்கிறது காதல் !
புரியாத மூச்சுக்களை
உள் வாங்கி மானசீகமாய்
வருடங்களை
நகர்த்திக் கொண்டு
மௌனங்களின் மொழிகளில்
பொதிந்துள்ள ஆழமான
கருத்துப் புதையல் போல
இறக்காத காதலுக்கு
இறப்பேது சொல் !
- பிரியத்தமிழ் -