ஆகலாம்ஆகலாம்
![](https://eluthu.com/images/loading.gif)
ஆ..கலாம்.. ஆகலாம்!
அன்பினில் ஆகலாம்-நல்
அறிவால் ஆகலாம்-தன்னை
அர்பணித்தே மனிதர் ஆ(க்)கலாம்!
ஆற்றலால் ஆகலாம்-சிறந்த
ஆளுமையில் ஆகலாம்-வீண்
ஆடம்பரம் தவிர்த்த மனிதர் ஆ(க்)கலாம்!
இன்முகம் காட்டி ஆகலாம்-தினம்
இனியவைப் பேசியே ஆகலாம்
இனிதாய் வழிநடத்தும் மனிதர் ஆ(க்)கலாம்!
ஈர்த்திடும் பேச்சில் ஆகலாம்
ஈரத்தின் நெஞ்சால் ஆகலாம்
ஈட்டியெனப் பாயாத மனிதர் ஆ(க்)கலாம்!
உறுதியுடன் உழைத்தால் ஆகலாம்
உள்ளத்தில் தேசம் நினைத்தால் ஆகலாம்
உணர்வினில் நேசமுள்ள மனிதர் ஆ(க்)கலாம்!
ஊனமனதை விட்டொழித்தால் ஆகலாம்
ஊக்கம் பிறர்க்களித்தால் ஆகலாம்
ஊதாரித் தனமற்ற மனிதர் ஆ(க்)கலாம்!
எளிமையை நினைத்தால் ஆகலாம்
என்றும் உண்மையாய் நடந்தால் ஆகலாம்
எண்ணித் துணியைம் மனிதர் ஆ(க்)கலாம்!
ஏணியாகப் பிறர்உயர்ந்திட ஆகலாம்
ஏக்கம் உடைத்து உழைத்தால் ஆகலாம்
ஏற்றம் நாடு பெறநாடும் மனிதர் ஆ(க்)கலாம்!
ஐயம் போக்கி உரைத்தால் ஆகலாம்
ஐம்புலனையும் அடக்கியே ஆகலாம்
ஐவிரல் ஒன்றுபட்ட மனிதர் ஆ(க்)கலாம்!
ஒன்றும் நன்றாய் செய்தால் ஆகலாம்
ஒற்றுமையைக் கடைபிடித்தால் ஆகலாம்
ஒருவரையொருவர் மதிக்கும் மனிதர் ஆ(க்)கலாம்!
ஓடியே அறிவைத் தேடினால் ஆகலாம்
ஓய்ந்திடாமல் முயற்சிகள் செய்தால் ஆகலாம்
ஓதியே நூல்பல கற்கும் மனிதர் ஆ(க்)கலாம்!
ஔடதமாய் ஐயா கலாம் வழி பின்பற்றி
ஔவியம் பேசாத மனிதர் ஆ(க்)கலாம்
அஃதே நலமெனும் கனவு மெய்ப்படவே
எஃகு வலிமையுடன் ஆகலாம் கலாம்!
.. விஜயகுமார் வேல்முருகன்