ஓர் ஒவியமும் ஓர் அவசரமும்
அவசர சாலையொன்றில்
யாசகன் ஒருவனின்
ஒவியமொன்று
காணக் கிடைத்தது.
நதியாக ஓடுவதாக வரையப்பட்ட
கோட்டோவிய வண்ணக் கோடுகள்
சில பரிசல்கள், சில மக்கள்
அவர்களோடு சில சுமைகள்
அவர்களுக்கும் அவர்கள் சுமைகளாக..
ஒடும் வண்ண நதியில்
ஓர் இலையை காப்பாற்றும்
ஒரு செந்நிற எறும்பு.
நதியின் கரையில்
ஒரு தென்னை மரம்.
சற்று கூன் வீழ்ந்த கிழவிப்போல..
அதிலோர் ஊஞ்சல்
ஊஞ்சலில் ஒரு சிறுமி.
சிறுமிக்குப் பின்புறம்
அந்தியாய் சிவக்கும் வானம்.
சற்று உயரே.. ஒரு வெள்ளை நிலா..
சற்றுத் தள்ளி
ஒரு வயல் வெளி.
செ.மீ இடைவெளியில்
நிற்கும் காதலர்கள்
அழகியல் பாடும் இவ்வோவியத்தில்
ஒவியர் என்ன சொல்லியிருக்கிறார்.?
யோசித்தவாறு..
முற்றுப்பெறா இக்கவிதையினை
முடிவிலா வாழ்கையாக
முடித்து வைக்கிறேன்.
--
-இளங்கோவன்