சிட்டுக் குருவிகளின் கூடு

நட்பாக வான்பரப்பில்
பறந்து திரிந்த
சின்னக் குருவிகளின்
பாதையில்
எதிர்பாராத் திருப்பம்

தாமாகவே
தமக்கெனத்
தேர்ந்தெடுத்தன
தனித்தனி
தாளிடப்பட்ட
கூடுகளை


ஒலி ஊடு புக முயன்று
தோற்றுப் போன
அவற்றிற்கான
இடைவெளியில்
வெற்றிடம் மட்டும்
வியாபித்துக் கிடந்தது

அவ்வப்போது
இக் குருவிகளின்
எண்ணங்கள்
ஒப்பனைகளுடன் மட்டும்
அரங்கேறும்
சில சோலைகளில்..

விவரிக்க முடியாத
வார்த்தைகள்
அரைகுறை மொழிகளுடன்
அளவளாவிக் கொள்ளும்
அப்போதெல்லாம்
கூட இருக்கும் குயில்கள்
விளக்கம் கேட்கும்.

காலப் போக்கில்
தாழிடப்பட்ட
கதவுகளின் பின்னால்
சபதமெடுத்தன
இரு குருவிகளும்
இந்தக் குருவி
கதவு தட்டாத வரை
அந்தக் குருவி கதவைத்
திறப்பதில்லை என..

தம்மைப் பாதுகாக்க
முனையும் போராட்டம்
காலத்தின் போக்கில்
தாளிட்ட தத்தம்
கதவுகளைப் பாதுகாத்துக்
கொள்ளும் போராட்டமானது

இப்போதெல்லாம்
கூடுகள் பத்திரமாக
இருக்கின்றன
குருவிகள்
பேசிக்கொள்வதில்லை
கதவுகளும்
பூட்டியபடியே..


ஒன்றை ஒன்று புரிதல்
இல்லாது போக
நாளுக்கு நாள்
இவை வளர்த்த
வெறுப்பு மூட்டைகளால்
இவற்றிற்கிடையேயான
இடைவெளி
இப்போது
நிரம்பியிருக்கிறது...

எழுதியவர் : சிவநாதன் (28-Jan-16, 12:34 am)
சேர்த்தது : சிவநாதன்
பார்வை : 179

மேலே