தென்னை மரம்

நீண்டு வளரும் தென்னைமரம்
நிமிர்ந்து நிற்கும் தென்னைமரம்
கிளைகள் இல்லை என்றாலும்
இளநீர் தந்திடும் தென்னைமரம்

தெய்வத்தைத் தொழுது வணங்கிடவே
தேங்காய் கொடுக்கும் தென்னைமரம்
தோப்பாய் அதனை வளர்த்தாலே
தொகையாய் பணம்தரும் தென்னைமரம்

இளநீர் வளர்ந்து முற்றிவிட்டால்
இனிப்பான தேங்காய் அடைந்திடலாம்
தேங்காயை சமையலில் நாம்சேர்த்து
தேகத்தில் பொலிவும் பெற்றிடலாம்

தென்னை மரத்தின் குறுத்தினிலே
தோரணம் அழகாய் செய்திடலாம்
பண்டிகை விழாக்கள் வருகையிலே
பாங்குடன் பந்தலில் கட்டிடலாம்

முற்றிய ஓலையின் துணையாலே
கீற்றுகள் அழகாய் பின்னிடலாம்
ஏழைகள் எளியோர் வாழ்ந்திடவே
ஏற்றக் குடிசைகள் கட்டிடலாம்

முதிர்ந்த தேங்காயை உலரவைத்து
மணமுள்ள எண்ணெய் அடைந்திடலாம்
காயங்கள் புண்களில் அதைத்தடவ
காணாமல் அவைகளை ஆற்றிடலாம்

தோட்டம் தெருவினைக் கூட்டுகின்ற
துடைப்பம் கிடைக்கும் கீற்றினிலே
உழைத்து வடிந்திடும் வேர்வைத்துளி
ஓடிவிடும் தென்னங் காற்றினிலே

தேங்காய் நார்களின் துணையாலே
திடமான கயிறுகள் திரித்திடலாம்
தேர்களை இழுத்திடும் வடங்களையும்
தேங்காய் நார்களில் செய்திடலாம்

தேங்காய்ப் பாலைக் குடித்தாலே
தேகத்தின் வெப்பம் தணிந்தவிடும்
வாய்ப்புண் குடல்புண் இருந்தாலும்
விரைவில் அதனையும் ஆற்றிவிடும்

பயன்தரும் தென்னை மரத்தாலே
பலவகை நன்மைகள் இருப்பதனால்
வீட்டில் தென்னைமரம் வளர்ப்போம்
வேண்டிய பயன்களை நாம்அடைவோம்

எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : சொ.பாஸ்கரன் (31-Jan-16, 7:14 pm)
சேர்த்தது : சொ பாஸ்கரன்
Tanglish : thennai maram
பார்வை : 3303

மேலே