நடமாடும் நதிகள் --அகன்

நடமாடும் நதிகள் --அகன்


இன்று உலகின் பல நாடுகளிலும் பல மொழிகளிலும் எழுதப்படுகிற ஒரு கவிதை வடிவமாகவும் கவிதை வகைமையாவும் இருப்பது ஜப்பானிய ஹைகூ கவிதை. ஜெர்மன், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்ச்சுக்கீசு, இத்தாலியம் மற்றும் பல இந்திய, ஆசிய, இலத்தீன் அமெரிக்க மொழிகளில் ஹைகூ தனது இடத்தை நிறுவிக் கொண்டுள்ளது. ஹைகூ, இப்படி உலகம் எங்கும் பரவியிருப்பது அது பிறப்பெடுத்த ஜப்பானிய மொழி மூலமாக அன்று. ஆங்கிலத்தின் மூலமாகவே ஹைகூ எல்லாத் திசைகளையும் எட்டியுள்ளது.

ஜப்பானில் ஹைகூ பொறிக்கப்பட்ட கற்கள் நகரங்களிலும் நாட்டுப் புறங்களிலும் காணப்படுகின்றன. பெரும் படைப்பாளிகள், கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் கவிதை உணர்வுத் தூண்டல் தேடி நெடும்பயணங்களில் வந்து தங்கிய இடங்களிலும், ஹைகூ கல்வெட்டுக்கள் இடம் பெற்றுள்ளன. ஜப்பானிலிருந்துகூட, ஜப்பானிய ஹைகூ கவிதைகளுக்கென ஆங்கிலத்தில் ஏடுகள் நடத்தப்படுகின்றன.

எது ஹைகூ என்பதற்கு எத்தனையோ விளக்கங்கள் சொல்லப்பட்டுவிட்டன; என்றாலும் இன்னும் எந்த விளக்கமும் ஹைகூவை முழுமையாகத் தெரிவித்துவிட்டதாகத் கூறமுடியாது. இன்று ஜப்பானில் இருபது இலக்கத்துக்கும் மேற்பட்ட ஹைகூ கவிஞர்கள் உள்ளனர். செய்தித்தாள்கள் பெரும்பாலானவற்றில் ஹைகூவுக்கு ஒரு பகுதி ஒதுக்கப்படுகிறது. ஏராளமான ஹைகூ கவிதைகள் வெளியீட்டிற்கும் விமர்சனத்திற்கும் வந்து குவிகின்றன. அறிஞர்கள் 17 அசைகள் கொண்ட ஒரு ஹைகூபற்றி ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீண்ட விரிவுரை செய்கின்றனர்.”

1912இல் நோபல் பரிசு பெற்ற இந்தியக் கவிஞர் இரவீந்தரநாதர் ஜப்பானிய ஹைகூ சிலவற்றை மொழி பெயர்த்ததோடு தம் தாய்மொழியாகிய வங்காளமொழியில் சில ஹைகூ கவிதைகளைப் படைத்தும் உள்ளார்.

மெக்சிகோ நாட்டுக் கவிஞரும், அரசுத் தூதருமான ஜோஸ் யுவான் தப்லாடா 1900இல் ஜப்பானுக்குச் சென்றிருந்ததன் விளைவாக-ஹைகூ தாக்கத்திற்கு உள்ளானார். தப்லாடா புனைந்த ஒரு பிரெஞ்சு மொழிக் கவிதை ஹைகூவைச் சிறப்பான முறையில் அடையாளப்படுத்தியது. இவர்தான் இஸ்பானியக் கவிஞர்களை ஹைகூவின்பால் ஈர்த்தவர் என்று சொல்லலாம்.

ஜெர்மானியத்து முதன்மைக் கவிஞர்களில் ஒருவரான ரில்கே `ஹைகாய்’ முயற்சியை 1920இல் செப்டம்பரில் பிரெஞ்சு மொழியில் செய்து, தோல்வி கண்டார். அதே ஆண்டு டிசம்பரில் அவர் ஜெர்மன் மொழியில் ஹைகூ முயற்சிசெய்து-சொற்களை மிகுதியாகப் பயன்படுத்தியிருந்தபோதும் அவர் ஏறத்தாழ ஜப்பானிய ஹைகூவுக்கு நெருக்கமாக வந்துவிட்ட கவிதைகயைப் புனைந்தார்.

1929இல் கிரேக்கக் கவிஞன் ஜார்ஜ் செபரிசு-ஹைகாய் அறிமுகம் பெற்று முயன்றிருக்கிறார் என்பதை அவர் இறந்த பிறகு வெளியிடப்பட்ட அவருடைய நாட்குறிப்புகள் தெரிவிக்கின்றன.

மகாகவி சொன்னதைக் கீழே குறிப்பிடுகிறேன்:

“ 2011- ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றுள்ள ஸ்வீடன் நாட்டுக் கவிஞர் தாமஸ் திரான்ஸ்ட்ராமர் படைத்துள்ள, புரியாப் பெரும்புதிர்’ (The Great Enigma) என்ற படைப்பை அண்மையில் படித்தப்போது அதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஹைகூ கவிதைகளை நான் கண்டேன். எனவே, உலகப் பெருங்கவிஞர்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கவிதை வடிவம் / வகைமை ஹைகூ என்று நாம் கருதலாம்.”

இப்படி உலகெங்கும் பரவிவிட்ட ஹைகூவை, இலக்கிய வரலாறுகளும், தொகை நூல்களும் இனி விலக்கிவிட முடியாது. இலக்கிய வடிவம்தான் ஹைகூ என்று கருதுகிற சிலர் ‘ஹைகூவை எப்படித் தமிழில் எழுத முடியும்? வெண்பாவை ஆங்கிலத்தில் எழுத முடியுமா? என்று வினவுவர். 2008இல் மகாகவி ஈரோடு தமிழன்பன் கோலாலம்பூர் சென்றிருந்தபோது விடுதியோன்றில் நடந்த இலக்கியச் சந்திப்பில் ஈழத்துப் பேராசிரியர் நுஃமான் அவர்கள் இந்த வினாவை எழுப்பினர். மகாகவி அவருக்குச் சொன்னதைக் கீழே குறிப்பிடுகிறேன்:

“ வெண்பா என்பது ஒரு கவிதை வடிவம் மட்டுமே. அது ஒரு கவிதை வகைமையன்று. ஆனால் ஹைகூ முதன்மையாக ஒரு கவிதை வகைமை; அப்புறம் ஒரு கவிதை வடிவமும்தான்! “ .

வடிவம் என்ற அளவுமட்டுமே ஹைகூவின் தன்மையாக இருப்பின் அது உலகம் முழுமையாயும் ஒருபோதும் பரவாது-பரவியிருக்கவும் முடியாது. அது, பின்பற்றத் தூண்டும், கவியுள்ளத்தில் மின்னல் பாய்ச்சும், படிப்பவனை ‘ஆகா’ என்னும் வியப்புணர்ச்சியுள் ஆழ்த்தும் ஒரு கவிதை வகைமை. படைத்தவனுக்குள் எழுந்த கவிதை-படிப்பவனைச் சேர்ந்து அவனுள் இருக்கும் கவிதையை எழச்செய்து விடும் என்ற செறிவியல் அடுக்குகளைத் தன்பால் கொண்டிருப்பது-ஹைகூ.


**************** நடமாடும் நதிகள் --அகன் ******************

1.தமிழ் நெல்லுக்குள்
தமிழகத்தில் ஆங்கில அரிசி
தனியார் பள்ளி.


2.தீக்குச்சி உரசலில் தீ
விறகில் வெப்பம்
விரலில் வெளிச்சம்


3.உளிகளோடு பாறைகள்
உறவில் சங்கமம்
உதிரியாய் சிலைகள்


4.வெப்ப உலையில் வினாக்கள்
வெந்து வழியும் விடைகள்
வகுப்பில் ஆசிரியன்.


5.காலடிச் சுவடுகள்
நிலத்தரை எங்கும்
திசை காட்டும் சின்னங்கள்


6. தழைத்த தமிழ்காட்டில்
குருத்துமுறிந்த போன்சாய்
- ஹைக்கூ கவிதைகள்


7.தூண்டில் நுனிபுழுக்கள்
மீன்கள் வயிற்றில் தீனி
எச்சில் இலைகளில் எலும்புகள்


8.மங்கள நிகழ்வுக்கு
வண்ண மய நெசவு
வெள்ளைப் புடவையில் நெசவாளி


9.மதிய உணவில் கொஞ்சமாய்
சத்துணவும் கடலைச் சுண்டலும்
பெரியதாய் வீடு ஆயாவுக்கு .


10.அறியாமை பர்தா விலகலும்
சிந்தனை விரல்களின் கிறுக்கலும்
வகுப்பறை


நன்றி : 1. ஹைஜின்னா ..2. நள்ளிரவில் படம் அனுப்பிய ஒருங்கிணைப்பாளர் தோழர் தி . என் . முரளி
3. வாசிக்கும் உங்களுக்கும்

எழுதியவர் : அகன் (6-Feb-16, 6:50 am)
பார்வை : 805

மேலே