ஊடகங்களே ஒரு நிமிடம் 1

ஊடகங்களே ஒரு நிமிடம்
உங்கள் பாதையை
உற்று பாருங்கள்
நீங்கள் புறப்பட்ட இடத்தை
நினைத்து பாருங்கள்

ஊருக்கு உண்மையை
உரக்கச் சொல்ல புறப்பட்ட நீங்கள்
விளம்பர வலையில் அகப்பட்டு கொண்டீர்கள்
உங்கள் எழுதுகோலும் புகைப்படக் கருவியும்
உண்மையைச் சொல்லட்டும்

சிறு பொறியாய் கிளம்பும்
சமூகச் சீர்கேட்டை
ஊதிப் பெரிதாக்கி குளிர் காய எண்ணாதீர்கள்
அந்த தீயில் எரிந்துப் போனவர்கள்
அயல் கிரகத்து விலங்குகள் அல்ல
உங்களோடும் உங்கள் சொந்தங்களோடும்
உறவாடியவர்கள்
நேற்று வரை மனிதர்களாய்க்
கனவுகளை சுமந்தவர்கள்
எரிந்து போய்ச் சாம்பலாய் கலந்தது
ஏற்புடையதா எண்ணி பாருங்கள் ?
குணம் நாடி குற்றமும் நாடி ஊடகங்களே
குணத்தை விரட்டி விட்டு
குற்றங்களைப் பெரிதாக்கி உலவ விட்டீர்கள் இதனால்
உலகப்பந்தில் ஓராயிரம் ஓட்டைகள்
வன்முறை அரக்கனின் கணைகள் துளைக்க
யாரோ மாண்டதைச் சுட்டி காட்ட
இங்கே எத்தனைப் பேருக்கு மாரடைத்து மரணம்
இலவசமாய் எத்தனை எத்தனைத் தீக்குளிப்புகள்
உண்மைகள் தேவைதான்
புனைவுகள் ஏதுமில்லாத உண்மைகளே தேவை
புனைவுகளோடு வரும் உண்மைகள்
பொய்மைக்கும் கீழானதே
இன்னும் எழுதும் எனது கரங்கள்
உண்மைக்கு வெளிச்சமாய்

எழுதியவர் : ச இரவிச்சந்திரன் (10-Feb-16, 6:37 am)
பார்வை : 143

மேலே