தமிழா உன் இமைகள் திறக்கட்டும்
பூக்களுக்கு சாமரம் வீசிய
எழுது கோல்களே!
புறப்படுங்கள், புதியதாய்
எழுதுங்கள் பாரதத்தின் சரித்திரத்தை.
பொயில்லாச் சமுதாயம் பிறக்கட்டும்!
ஏழ்மை இருளை கிழிக்கட்டும் !
பொன்னாய் புவியே மாறட்டும் !
வீழட்டும்! வீணர்களின் விதண்டாவாதச் சிந்தனைகள் .
விரல் சொடுக்கி அழைப்பவருக்கு அந்த
விரல்கள் புரியும் விந்தையை இந்த
வியனுலகம் காட்டட்டும் !
கணிபொறியின் ஆணைக்கும்
விண்ணூர்தியின் அசைவுக்கும்
நுனி விரல்கள் செய்யும் பணியை
நம்புவியொர் உணரட்டும்!
கை கால் முடக்கிப் பாயில்
உறக்கம் வராமலும் உறங்கும்
உலுத்தர்களை அகற்றி
வினாடிப் பொழுதில் விந்தைகள் பல புரியும்
வீரர்கள் அணிவகுத்து புவியை நிறைக்கட்டும் !
பசியென்று கையேந்தி நில்லாமல் இந்த
பாருக்கே சோறூட்ட நாங்கள் தயாரென்ற
பண்பாளர்கள் படை படையாய் குவியட்டும்!
மலை போலே பொற்குவியல்
மணம் வீசும் நெற்குவியல்
நெல்லுக்கு பொன்னை மாற்றும்
நல்லதோர் விடியல் தோன்றட்டும்!
கலைவாணன் கரங்கொண்ட உளியில்
கவினுறு கலைகள்
பல்லாயிரம் தோன்றட்டும்!
இல்லை என்ற சொல்லே
எம் தமிழ் விட்டு மறையட்டும்!
தமிழா! உன் இமைகள் திறக்கட்டும்! உன்
விழிகள் புதிய சரித்திரத்தின்
முகவுரை எழுதட்டும் !