புரியா பாசம்

ஆகாய இருள் திரையின் ஒளியாய்
வட்டமிட்டு பிரகாசிக்கும் வெண்ணிலவே!
ஆதி முதல் இன்று தொட்டு
வையத்தில் வளம் வந்தாயே!
அண்டத்தில் ராஜபவனி வந்த உன்னை
ரசிக்காதவர் எவரும் இலர்!
ஆர்ப்பரிக்கும் அழகில் மூழ்கி உன்னை
நித்தமும் வர்ணித்தவர் பலர்!
ஆழமிகுந்த அஞ்சனத்தின் முடிசூடா ராஜனே!
என்னை முழுதும் அறிந்தவனே!
ஆழ்மனதின் குழியில் புதைந்து கிடந்த
மனோரதம் அனைத்தும் தெரிந்தவனே!
ஆதவன் மறைந்து செவ்வானம் சிவந்த
பின்னே உன்னை வந்தடைவேனே!
ஆழியின் ஆழத்தை கடைவதைவிட மனதை
புரட்டி உன்னிடம் சொல்வேனே!
அகிலத்தில் உன்னை வர்ணித்தவர் மத்தியில்
உன்னை நண்பனாய் நினைத்தேனே!
ஆயினும் எதையும் செவியில் ஏற்றாமல்
என்னை நன்றாய் ஏமாற்றியதேனோ!
மனமுருகி உக்குரலில் உளறியதை அன்பின்
உருவிடம் சொல்ல மறந்ததேனோ!
மறந்த நின் செயலால் இன்றென்
மனம் துகளாய் உடைந்ததே!
மனதின் ஓட்டத்தை அன்புருவிடம் வார்த்தையாய்
முனைய சொல்லும் தடுமாறியதே!
நிதமும் உளறிய செய்தியை
அன்னையிடம் சொல்வாயென நினைத்தேனே!
நிலவாய் எண்ணாமல் உறவாய் எண்ணியதன்
பலன் தான் இதுவோ!
நினைவின் ஆழத்தில் மூடி கிடக்கும்
பாசம் உனக்கும் தெரியவில்லையோ!
ஆயிரம் படைகள் எதிர்த்த போதிலும்
அஞ்சாதது என் நெஞ்சமே!
ஆவின் குரல் கேட்டு இளங்கன்று
அமைதியாய் நின்று உருகுமே!
இளங்கன்றின் மனதினை போல் இலகுமே
அஞ்ஞையின் சொல்லை கேட்டே!
இனம்புரியா உணர்வு மென்மையாய் சூழ
அடிமனதில் அமைதி நிலவுமே!
ஆயினும் அன்புருவின் திலகம் சற்றும்
என்னை புரிந்து கொள்ளவில்லையே!
அரவணைப்பு சற்றும் இல்லா லோகத்தில்
ஜனித்த காரணம் தெரியவில்லையே!
காரணம் அற்ற ஜனனத்திற்க்கு அன்று
அர்த்தம் தந்தவள் நீயே!
காலம் மாறினும் என் எண்ணம்
அகிலம் உள்ளவரை மாறாதே!
சம்பவமாய் இருக்கும் என் ஜனனத்தை
சரித்திரமாய் ஓர்நாள் மாறுமே!
சரித்திரமாய் மாறும் நாளிலாவது அன்புருவே
என்னை புரிந்து கொள்வாயோ!
சிலைபோல் கேட்டுக் கொள்ளும் நிலவே
இதையாவது அன்புருவிடம் சொல்வாயோ!!!!!

எழுதியவர் : புகழ்விழி (17-Feb-16, 2:42 pm)
Tanglish : puriyaa paasam
பார்வை : 207

மேலே