நான் முகமற்று போகிறேன்

யாரோ ஒருவரின்
அதிகாரத்தில்
உதாசீனப் படுத்தப் படுவதில்
நான் முகமற்று
போகிறேன்....
என் நிமிர்ந்த நடை
குறுகிப் போகும்
சமயத்தில் என் பாரதி
மது அருந்திக் கிடப்பதைப் போல
ஒரு மாயவலை
அறுக்கத் துவங்குகிறது....

காற்றும் மலையும்
தனிமை நிரப்பும் என்று
நின்ற பொழுதில்
பெருங்குற்றம் என எனை
சந்தேகிக்கும்
மானுட முகமூடிகள்
வண்ணங்களற்றவை.....

நான் எதிர்க்க முடியாதவன் அல்ல -
எதற்கென்று
யோசிக்கும் நொடியில்
விஷம் நீட்டி சிரிக்கும்
எதுவும் என்னை
நொறுக்கத்தான் பார்க்கிறது
முதலில்....

எழுதிய எழுத்தெல்லாம்
உருமாறி உயிர் பிச்சை
கேட்பதில்
வீரம் எது, அறம் எது....?
ஒன்றுமில்லாத
மனதுக்குள் நான் யார்....
என்றொரு சூன்யத்தை
மெல்ல வரையும்
கோட்டோவிய விரல்களின்
நகங்கள்
அழுக்கின் கிடங்காய்......

பேசாமல்
அழுது விடுகிறேன்.....
அழுவது ஒன்றும்
பெரிதல்ல....
எழுதுபவனுக்கு......

கவிஜி

எழுதியவர் : கவிஜி (20-Feb-16, 2:16 pm)
பார்வை : 84

மேலே