நினைவெனும் ஆயுதம்
பொறந்த வீட்டுக்குள்ளேயே
போய் சேரக் கூடியவன்
அள்ளிப் போட்டிருந்ததாம் அம்மன்
ஆனால்
அப்போதே வென்றிருந்தேன் அம்மனையும் இந்தக் கொம்பன்
.
நினைவு தெரிந்து நீச்சல் தெரியா வேளை
தரையாழம் தொட்டு தண்ணீரைக் குடித்தவனை
தாமிரபரணியே
தலையைத் தூக்கி விட்டு
தரையில் தள்ளிச் சென்றது ஒரு முறை
.
பள்ளிச் சென்ற ஒரு வேளை
மூக்கடிக்க சாலையில் விழுந்த போதும்
மூச்சு நின்று போக வில்லை
பல்லை மட்டும் பதம் பார்த்து
பத்திரமாக தாங்கி கொண்டாள்
பூமி மாதா ஒரு முறை
.
அடிக்கடி வந்து விடும் அக்னி காய்ச்சல்
மருத்தவ கருவிகளின் வெப்ப நிலை தாண்டியே
வாழ்வின் எல்லையில் வந்திழுக்கும்
மரணத்தின் கைகளை
தட்டிவிட்டு வந்திருப்பேன் சில முறை
.
இப்படியாக என்னிடம் தோற்று
வெறுங்கையுடன் சென்ற
அந்த எமன் தான்
இப்போதும் வருகிறான் என் உயிர் பறிக்க
இப்போது நான் தோற்கும் நேரம்
ஆமாம்...
அவன் கையில் வைத்திருப்பது
"அவளின் நினைவெனும் ஆயுதம்"