ஞான வாசிட்டம் - 2

ஒட்டிக்கொள்பவை
மனதின் வாசனைகள்..
மிச்ச மீதியின்றி விட்டொழிக்க
வீடு பேறு கிட்டும் ..
பிறவிப் பெருங்கடல் கடக்க!

அசுத்த வாசனை ..மலினம்
மீண்டும் மீண்டும்
பிறக்கும் கோரம் தரும் ..
மடமையின் செறிவே உடம்பாக ..
அகம்பாவம் வளர்ப்பது மலினம்..

நெருப்பால் வறுத்தபின்
முளைக்கா விதையாக..
ஆவது சுத்த வாசனை ..
மீண்டும் மீண்டும் பிறந்துழலும்
மறு பிறவி நீக்கும்!

சுத்தவாசனை வளர்ப்பார்
முன்வினை களையவே
உடல் சுமப்பார் ..
ஞானத்தால் எதையும் பார்ப்பார்
சீவன் முக்தர் என்றாவார்!

உடம்போடு விளங்கும் போழ்தே
விடுதலை பெற்றவர் சீவன் முக்தர்
வரும் பிறவிகள் தவிர்த்தவர்..
நெறியுடன் வாழ்பவர் ..அவருள்
இராமபிரான் ஒருவர்!

வேதமும் நூல்பலவும்
கற்றே தெளிந்தனன் இராமன்
விளையாட்டுப் பருவமதை தாண்டியே
ஆன்ம லயமடைந்த ஆன்றோர்
வாழ்ந்த இடம் ஏகிட விழைந்தான்!

தொன்மை நிறை நதிகளும்
ஆலயம் தவ வனங்கள் காணலும்
விழைவு கொண்டவன் பெற்றான்
தந்தையின் சம்மதம்
"கடிதின் மீள்தி" என்றே!

சொல்லிய இடங்கள் யாவும்
தம்பியரோடு கண்டு மகிழ்ந்தபின்
சுவரினால் அடித்த பந்தென
இராமனும் அயோத்தி மீண்டான்
மலர் சொரிந்து மக்கள் வரவேற்க!


கண்டதை ..கேட்டதை..நிலவும்
பல நீதிகள் யாவையும் தந்தை
தசரதன் வசம் சொல்லியவன்
தன்மையில் போக்கினில் சில மாற்றம்
அவனிடம் இல்லை தடுமாற்றம்!

(தொடரும் )

எழுதியவர் : கருணா (பாலகங்காதரன்) (24-Feb-16, 4:53 pm)
பார்வை : 112

மேலே