தலைவி தான் கருவுற்றலை தலைவனிடம் கூறுதல்

காட்சி யகற்றும் காரிருள் விலக்கிய
சுடரொளித் திங்கள் தன்வடிவு முழுக்குன்றா
நம்விழித்திரை முற்தோன்றி வாழ்த்தும் ஏது
என்னென்று அறிவாயோ தலைவா?

கண்டம் பற்பல பவனிசெய்யும் காற்று
கட்டுள் அடங்கா பொங்கிவரும் உவப்பால்
கொப்புபல உலுக்கி அசைவிப்பதின் ஏது
என்னென்று அறிவாயோ தலைவா?

மிகைகொண்ட வனப்புடைய இப்பாரினை பகிரும்
குறைகொண்ட மதியுடைய பிராணிகள் தத்தம்
ஓசைகளில் குரற்பாக்கள் இசைத்திடும் ஏது
என்னென்று அறிவாயோ தலைவா?

எண்ணில் அளமிகும் நமக்குரிய பொன்னிற்கும்
எண்ணால் அளயியலா நம்முடைய அன்பிற்கும்
தரித்த சூலால் கால்வழி தோன்றலின்
நிகழென்று அறிவாய் தலைவா!


சூழல் :
மனைவி கருதரித்திருக்கிறாள். இதை தன் அன்பு கணவனிடம் குறிப்பால் சொல்ல முடிவு எடுக்கிறாள்.

சொற்பொருள் விளக்கம் :
காரிருள் – கருமையான இருள்
திங்கள் – சந்திரன்
ஏது – காரணம்
உவப்பு – மகிழ்ச்சி
கொப்பு – மரக்கிளை
மிகை – அதிகம்
வனப்பு – அழகு
பார் – உலகம்
மதி – அறிவு
குரற்பாக்கள் – குரல் பாடல்கள்
சூல் – கரு
கால்வழி – சந்ததி

அணி : தற்குறிப்பேற்றம்



விளக்கம் :
பார்க்கும் திறனை பறிக்கும் இரவின் இருளை விரட்டும் ஒளி பொருந்திய சந்திரன் இன்று தன் முழு வடிவில் நம் கண்முன்னற் வந்து நம்மை வாழ்த்துவதன் காரணம் ஏன் என்று அறிவாயா என் தலைவனே?

பல நிலங்களுக்கு சென்று வரும் காற்று கட்டுப்படுத்த முடியாத தன் மகிழ்ச்சியால் மரக்கிளைகளை உலுக்குவதின் காரணம் ஏன் என்று அறிவாயா என் தலைவனே?

அழகு மிகுந்த இவ்வுலகத்தில் நம்மோடு சேர்ந்து வாழும் அறிவில் சிறுமை உடைய பிராணிகள் தங்களுடைய ஓசைகளில் பாடல்கள் இசைத்திடும் காரணம் ஏன் என்று அறிவாயா தலைவனே?

எண்ணிக்கையில் அளவு மிகுந்த நம் செல்வத்திற்கும் எண்ணிக்கையால் அளக்க முடியாத நம் அன்பிற்கும் நான் கொண்ட கருவால் சந்ததி தோன்றுவதால் இவைகள் நிகழ்கின்றன என்று புரிந்துகொள் என் தலைவனே!

எழுதியவர் : குறள் பொழிலன் (25-Feb-16, 1:19 pm)
பார்வை : 132

மேலே