கனவில் தேடும் காதல்
நீயாக இருந்த உன்னிலும்
நானாக இருந்த என்னிலும்
மௌனமாக இருந்தது அது.
நானாக இருந்த என்னை
நீயாக இருந்த உன்னிடம்
நாமாக இணைக்கத்
தீயாக இருந்த உன்னிடம்
பஞ்சாக இருந்த என்னை
பற்றவைக்கும் அதன் முயற்சியால்
பகலிரவுத் தூக்கமில்லாமல்
படுத்துதொரு பாடு ...
அதுவாகி இருந்திருக்கக் கூடுமென்ற உன்னிடத்தில்
என்னிடம் அதுவாகி இருந்த அதுவிடம்
எதுவாகவோ இருந்த எதுவோ
மெதுவாகச் சென்று
பொதுவாக அதுவும் இதுவும் பேசி
மதுவாக போதையேற்றியபோதும்
அதைப்பற்றி எதுவுமில்லாததுபோல்
நீயிருக்க...
அதுவும் இதுவும் எதுவும் என்று
ஒன்றுமில்லாத ஒன்றை
எல்லாமாகக் ஏந்திக் கொண்டு
திரிகிறது இதயத்தில் ஏதோ ஒன்று
அந்த ஏதோ ஒன்றை
இதுதானென்று அடையாளப்படுத்த
ஏதோ ஒன்று உனக்குள்ளும்
இருக்கலாம் அல்லது
இல்லாமலிருக்கலாம்
என்னும் ஆராச்சியில் இறங்கித்
தேடிவிடத்தான் தேடுகிறேன் உன்னை
என்னை உன்னிடத்திலும்
உன்னை என்னிடத்திலும்
தேடும் தீவிரத்தில்
உன்னில் நானோ
என்னில் நீயோ தொலைந்தாலும்
நம்மில் அது தொலையாமல்
நாமே அதில் தொலைவது
தேடலின் வெற்றி.
இப்போதே அதற்கான
நேரம் தொடங்குகிறது ..
இங்கே என் கனவில்
உன்னைத்தேடும் நானாய்
அங்கே என்னைத்தேடும்
உன் கனவின் முடிவில்
விடியல் பிறக்கட்டும்.
*மெய்யன் நடராஜ்