நேபாளம், அண்டை நாடு, நல்லுறவு-------இமாலய சவால்
இமாலய சவால்!
ஆறு நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்திருந்த நேபாளப் பிரதமர் கே.பி.ஒளியின் வருகை சமீப காலமாக இரு நாடுகளுக்கும் இடையில் இருந்துவந்த முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது. தனது பயணம் தொடர்பாக வெள்ளிக்கிழமை அன்று கருத்துத் தெரிவித்த ஒளி, மாதேசிகள் போராட்டத்தால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் ஏற்பட்டிருந்த விரிசலை இப்பயணம் சரிசெய்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். நேபாளத்தில் கொண்டுவரப்பட்ட புதிய அரசியல் சட்டத்தில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் அதில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி மாதேசிகள் தொடர் போராட்டங்கள் நடத்தினர். இப்போராட்டத்தின் பின்னணியில் இந்தியா இருந்ததாகப் பேசப்பட்டது. இந்தியாவிலிருந்து கொண்டுசெல்லப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் நேபாள எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதால் பிரச்சினை மேலும் பெரிதானது. நீண்டுகொண்டே சென்ற குழப்பத்தின் முடிவில், மாதேசிகளின் சில கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக அரசியல் சட்டத்தில் மாற்றங்களைச் செய்வதாகப் பிரதமர் ஒளி உறுதியளித்தார். இதையடுத்து, மாதேசிகள் ஒருவழியாகத் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இந்தப் பிரச்சினையில் தலையிட்டதால் நேபாள மக்களின் அதிருப்தியை இந்தியா பெற வேண்டியதாயிற்று. 2015-ல் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து மீட்பு மற்றும் நிவாரண உதவிகள் செய்ததன் மூலம், அந்நாட்டு மக்களிடம் இந்தியா பெற்றிருந்த மதிப்பும் வெகு வாகச் சரிந்தது. தங்களுக்கு இடையிலான உறவைப் புதுப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நேபாளப் பிரதமரின் வருகை அதற்கான கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது.
நிலப் பகுதிகளால் சூழப்பட்ட நாடு என்பதுடன் பொருளாதார ரீதியாக இந்தியாவைச் சார்ந்திருக்கும் நேபாளம், இந்தியாவுடன் சுமுக உறவைப் பேணுவது அவசியம். இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் நேபாள எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட சமயத்தில் ஏற்பட்ட தட்டுப்பாடும் இதை உறுதிப் படுத்தியது. இரு நாடுகளுக்கும் இடையில் திறந்த எல்லைப் பகுதிகள் உள்ள நிலையில், நேபாளத்தின் புவிசார் அரசியல் முக்கியத்துவம் அலட்சியப்படுத்த முடியாதது என்பதால், அந்நாட்டுடனான நட்பு இந்தியாவுக்கும் அவசியம். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைக்கு அருகே அமைந்துள்ள பிஹார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்க நேபாளத்தில் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்வதும் இந்தியாவுக்கு முக்கியம்.
அந்த வகையில் கே.பி. ஒளியின் வருகை முக்கிய விஷயங்களைப் புதுப்பிக்க உதவியிருக்கிறது. நேபாளத்தின் மறுகட்டமைப்பில் உதவுவதாக இந்தியா அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவது என்று முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகியிருக்கிறது. சாலைத் திட்டங்கள், மின் பரிமாற்றம், பயணம் மற்றும் சரக்குப் போக்குவரத்து வசதிகளை மேம் படுத்துவது போன்றவை தொடர்பாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கின்றன.
நேபாள அரசியல் சட்டத்தைப் பொறுத்தவரை, இந்திய அரசு தனது முந்தைய நிலைப்பாட்டில் பெரிய அளவில் மாற்றம்செய்துகொள்ள வில்லை. எனினும், அரசியல் சட்டம் எழுதப்பட்டது ஒரு முக்கியமான சாதனை என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருக்கிறார்.
இதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது நேபாளப் பிரதமர், அவரது அமைச்சரவை மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பு. இதன்மூலம் பொருளாதார வளர்ச்சியில் உள்ள தடைகளை முறியடிக்க முடியும். வெற்றியின் அடையாளமாக மாதேசிகள் வசிக்கும் பகுதிகளில் அமைதியை ஏற்படுத்தவும் முடியும். உண்மையான கூட்டாட்சி நாடாக நேபாளத்தை வழிநடத்துவதில் ஏற்படும் தடைகளையும் எதிர்கொள்ள முடியும். இதற்கிடையே பிரதமர் கே.பி. ஒளியின் இந்தியப் பயணம் முற்றிலும் தோல்வியடைந்து விட்டதாக ஐக்கிய ஜனநாயக மாதேசி முன்னணி குறிப்பிட்டிருக்கிறது. நேபாள அரசு உறுதியளித்திருக்கும் தங்கள் கோரிக்கைகள் முறையாக நிறைவேற்றப்படாதபட்சத்தில் மீண்டும் போராட்டத்தில் இறங்கப்போவதாக அந்த அமைப்பு எச்சரித்திருக்கிறது. இந்நிலையில், மாதேசிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதை உறுதிசெய்ய வேண்டிய அவசியம் நேபாள அரசுக்கு இருக்கிறது. மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும்பட்சத்தில் நமது அண்டை நாட்டில் அமைதி திரும்புவதற்கு நீண்டகாலம் பிடிக்கும் என்பதால், இந்திய அரசும் இதில் உரிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.