தேடி வந்த சொற்கள்
தேடிச் செல்கிறேன்
எனக்கான சொற்களை
ஒளிர்விழந்து போகாத
ஓர் தொலை தூர
நட்சத்திரத்தின்
நம்பிக்கையில் ..
சாளரங்களுக்கப்பால்
தலை சாய்த்திருக்கும்
மாலைச் சூரியனின் நாளைய
புலர்வின் கிரணங்களில்...
காற்றுக் கலைத்துச்
சென்ற மணல் மூடிகளில்
உதிர்ந்தும் உதிராமல்
ஒட்டியிருக்கும்
ஈர நினைவுகளில் ..
கரையொதுங்கும்
சிப்பிகளில் காயாத
கண்ணீர் முத்துக்களில் ..
வெள்ளலைப் படிமங்கள்
விடாது அழித்துச் செல்ல
முகம் இழந்த கரையில்
முன்னேறத் துடிக்கும்
சிறு நண்டின் ஊர்தலில் ...
பேசப்படா மொழிகளுக்கிடையே
வறுமையான வரிகளுடன்
வலம் வருகின்றன
இச் சொற்கள்
தாமாகவே தளர்வான
வாக்கியங்களுள்
இறுகப் பிணைந்து
கொள்கின்றன
கவிதையா ...பாடலா
தெரியவில்லை ....
எந்த ஓசையும் நிரப்பமுடியாத
வெற்றிடமற்ற
பெரு வெளியொன்றில்
ஒலி அலைகளாய்
பரவவிடுகிறேன்....
காலப் பெரு வெளியின் கனத்த
காற்றில் கலந்து
மெல்ல மெல்லத்
தேய்ந்து போன ஓசையின்
திசையில் மிதந்து மீண்டும்
வந்து கொண்டிருந்தன
என் சொற்கள்.
இது வரை
தேடிக் காணாத ஒரு
ஒற்றைக் குயிலின்
ஓசை வழி வரும் பாடலாய்..