முதலீடில்லா வியாபாரத்தில்

முதலீடில்லா வியாபாரத்தில்...
============================

விற்பனை என்று கூறிக் கொண்டு
நான் எதனையும்
எடுத்துச் செல்வதில்லை
என்னைத் தவிர..!

வீடு திரும்பிய
காலைப் பொழுதிலெல்லாம்
எனக்கான வரவேற்புகள்
சிரத்தில் தண்ணீர் ஊற்றி
தீட்டுக் கழித்தல் தினமுமாய்..!

முதலீடில்லா வியாபாரத்தில்
முழுதுமாய் இலாபம் தான்
தினமும் எண்ணிக் கொள்கிறார்கள்
எவ்வளவு வந்ததென்று..!

வருமானத்தை
கண்களில் ஒற்றிக் கொள்பவர்கள்
என் மானத்தைப்பற்றி
இதுவரை நினைத்ததே இல்லை..!

சிரத்தை தண்ணீர் நனைக்கும்போதே
விழிகளை கண்ணீர் நிறைக்கிறது
கழுவிக் கொள்கிறேன்
பாவங்களை கண்ணீரால்..!!

மாதத்தில் மூன்று நாட்கள்
விடுமுறை அளிக்கும் இயற்கைக்கு
நான் நன்றி கூற மறந்ததே இல்லை..!!

(குறிப்பு: அமுதசுரபி கவிதை தொகுப்பிற்காக
தெரிவு செய்யப்பட்டக் கவிதை. படத்தைப் பார்த்து
எழுதியது)

எழுதியவர் : சொ.சாந்தி (2-Mar-16, 10:00 pm)
பார்வை : 61

மேலே