சாலையோரம்

அந்த நெடுஞ்சாலையோரம்
இன்னும் உயிரோடு விட்டுவைக்கப் பட்ட
அசோகர் காலத்து ஆலமரம் !
தூரத்தில் ஒரு ஒற்றைப் பனைமரம் !
ஏதோ மலைசூழ் சுற்றலா இடந்தேடி
பாய்ந்துகொண்டிருந்த உல்லாசப் பேருந்து
சாலையோரமாய் கிறீச்சிட்டு நிற்க
இறங்கிய இளம்வயது பட்டாளம்
வெவ்வேறு திசைகளில்
தமிங்கலம் பேசிச் சிதறியது !
ஒற்றைப் பனைமரத்தொடு
சுயம்பி எடுத்து கொண்டு
நெகிழிப் பைகளை பிரித்தெறிந்து
குறுகுறுத்தது சில சிறுசுகள் !
இருபது நிமிடங்களில்
காண்பதெல்லாம் அற்புதமென
கலகலத்த மென்பொருள் தலைமுறையை
ஏற்றிக் கொண்ட குளுகுளுப் பேருந்தின்
டம்டமாய்ப்பு இசை
காற்றில் கரைந்து போனதும்..
உச்சி பிளக்கும்
சூரிய உருண்டை போல்
கரும்பழுப்பு நொங்குகள்
கூட்டியிருக்கும் மரத்தடியில்
கூடவே கிடந்திருந்தன
விசிறியடிக்கப்பட்ட
செம்பழுப்பு மென்பானத்தின்
நெகிழி குப்பிகளும்...
பொய்த்துப்போன எதிர்பார்ப்புடன்
வரப்போகும் வாகனத்துக்காய்
சாலையில் பதிந்திருந்தன
நொங்கு விற்கும் முதியதம்பதிகளின்
இடுங்கிய கண்களும்..