அஞ்சுகச்ச உடையணிந்து

அஞ்சுகச்ச உடையணிந்து தங்கப் பாத்திரத்திலே
அஞ்சு நதியின் நீரெடுத்து அஞ்சு பழத்தின் சாறுடன்
பஞ்சலோக சிலையின் மீது கொஞ்சம் கொஞ்சமாகவே
மஞ்சனங்கள் மட்டும் செய்யும் மதியிலாத மாந்தரே!

நஞ்சைபுஞ்சை நிலன்கள்நீச்சல் புகழும்பணமும் இனபிற
துஞ்சும்போதும் துலங்கும் போதும் தேடிநாடி ஓடுவீர்.
வெஞ்சினமும் கொள்ளுவீர்; வஞ்சனைகள் விலக்கிடீர்;
பஞ்சுமெத்தை பகட்டுவாழ்வில் மூழ்கி மூழ்கி உழலுவீர் ;

செஞ்சபாவக் கணக்குத்தீர க்ஷேத்திரங்கள் செல்லுவீர்;
கொஞ்சமேனும் பாவம் குறைய தானதர்மம் செய்குவீர்;
சொல்லின் பொருளும் புரிந்திடாமல் ஸ்தோத்திரங்கள் சொல்லுவீர்.
கெஞ்சிநீங்கள் கேட்டிடினும் குப்தன் கணக்கில் குறையுமோ?

எஞ்சிநிற்கும் கொஞ்ச வாழ்வில் அஞ்சுபுலனை அடக்கியே ;
அஞ்சுபொறியை அடக்கியாண்டு ஐம்மலங்கள் விலக்கியே
அஞ்சுஅட்சரங்கள் கொண்ட பரமன் நாமம் பாடினால்
நஞ்சை உண்ட நீலகண்டன் அருளுனக்குக் கிட்டுமே!

பஞ்சில்பட்ட தீப்பொறியே பெருந்தழலாய் ஆகும்போல்
நெஞ்சில் ஞானப் பொறியும் பட்டு தீபமாக எரியுமே!-பிர
பஞ்சமெங்கும் உள்ள பொருளில் ஊடுருவி உறைந்தவன்
பிஞ்சகனின் கழல் பணிந்து வாழ்க வாழ்க வாழ்கவே!

எழுதியவர் : ரமேஷ் ( கனித்தோட்டம்) (4-Mar-16, 6:41 pm)
பார்வை : 62

சிறந்த கவிதைகள்

மேலே