உயிரான உயிர்
இமையோரம் குந்தி விளையாடும் அழகே
எழுதாத பாடல் இசைக்கின்றக் குயிலே
உனக்காகத் தாயின் விழி மூடவில்லை
உயிரேநீ அன்பின் உறவுக்கு எல்லை..
சுமைதாங்கிப் பெற்ற சுகமான வரமே
சுடர்வீச வந்த பொன்வானின் நிலவே
என்கண்ணின் மணியாய் உருமாறி விட்டாய்
நானுண்ண நாளும் நீயன்பு மிட்டாய்
இதயத்தில் வந்து இளைப்பாறும் சொந்தம்
இதழ்முத்தத் தாலே களைப்பாற சொர்க்கம்
உதயத்தை வாழ்வில் வரவைத்தப் பயிரே
உயிரோடு உயிராய் உயிரான உயிரே..
*மெய்யன் நடராஜ்