கவிதை மீதொரு உரையாடல் சொல்முறையே கவிதையாகும் அழகு ----
நகுலனின் கவிதை வரிகளைச் சொல்லி மகிழ்வது இலக்கிய உலகில் ஒரு கொண்டாட்டம். ‘யாருமில்லாத பிரதேசத்தில்/என்ன நடந்துகொண்டிருக்கிறது?/எல்லாம்’ இப்படியான வரிகள் நகுலனின் தனி அடையாளம். கவிதைக்குள் நகுலன் அப்படி என்ன செய்துவிட்டார்?
தமிழ்க் கவிதையில் பயணிக்கிற வாசகன் கண்டு களிப்பதற்கு இடங்கள் ஏராளம் உண்டு. சங்கப் பாடல்களில் கவிதையின் அழகியல் சொல் முறையிலேயே ஈர்த்துவிடும். கொன்றை மரங்களில் பூத்திருக்கும் மலர்கள் பொய் சொல்கின்றன எனத் தன் உள்ளத்தை ஆற்றும் தலைவியின் கூற்று கவிதையாகிறது. நகுலனிடம் அவருக்கேயான ஒரு சொல்முறை உண்டு. சொல்முறை அழகே கவிதையாகுமா? ஆகிறது நகுலனிடம்.
பார்த்தேன் என்ற தலைப்பிட்ட கவிதை,
என் நாற்காலியில்/இருந்துகொண்டு/ஒரு பிடிபடாத வேளையில்/இதை எழுதிக்கொண்டே/இருந்தவன்/மனம் அசைபோட/அகஸ்மாத்தாகக்/கீழே
நாற்காலி அருகில்/அந்த மஞ்சள் நிறப் பூனை/என்னையே/பார்த்துக்கொண்டிருப்பதைப்/ பார்த்தேன்.
மஞ்சள் நிறப் பூனையின் ரகஸியம் அறியாது மனம் அமைதிகொள்ளாது. மனதில் பிடிபடுவது நகுலனின் பூனையாக இருக்கலாம் அல்லது வேறாகவும் இருக்கலாம். அகஸ்மாத்தாக என்ற சொல்மீது கவியும் மனதையும் விடுவிக்க முடியாது. நகுலனின் ஒவ்வொரு கவிதையும் வசீகர அவஸ்தைதான். எனவேதான் மீண்டும் மீண்டும் வாசிக்கிறோம். ‘அந்த மஞ்சள் நிறப் பூனை’ என்கிறபோது பரிச்சயமான பூனையாகிறது
இவைகள்’ கவிதையில், ‘என் வருகைக்காகக்/காத்துப் பதுங்கி/முகம் பதித்து/கண்கள் நட்டுக்/ காத்திருக்கும்/அந்த மஞ்சள் நிறப்/பூனை’ என்கிறார். கண்கள் நட்டுக் காத்திருக்கும் என்கிறபோது விரிகிற காட்சி மனதை வருடுகிறது. இவரது கவிதையில் அடிக்கடி வரும் சுசீலா போலத்தான் மஞ்சள் நிறப் பூனையும். அது வேறு யாருமல்ல. நகுலனிடம் அந்த நேரம் உரையாடும் ஒரு உறவு.
தனிமையின் தனி உலகம்
நகுலன் தனது தனிமையை இன்னொரு உலகமாகச் சமைத்துவிடுகிறார். இந்தப் படைப்பு வினைதான் கவிதையாகிறது. தற்காலக் கவிதையில் நகுலன் காட்டிய வெளி புதிது. இந்த வெளி முற்றிலும் அகவயமானது. நம்மை நாமே நமக்குள் எட்டிப் பார்ப்பது. கண்ணாடிக்குள் அதிரும் எண்ணற்ற பிம்பங்கள் நகுலனின் கவிதைகள். நகுலனுக்கும் நமக்கும் என்ன தொடர்பு? அவரே சொல்கிறார்,
ஒரு கட்டு/வெற்றிலை/பாக்கு சுண்ணாம்பு/புகையிலை/வாய் கழுவ நீர்/ஃப்ளாஸ்க் /நிறைய ஐஸ்/ஒரு புட்டிப்/பிராந்தி வத்திப்பெட்டி/ஸிகரெட்/சாம்பல் தட்டு/பேசுவதற்கு நீ/நண்பா/இந்தச் சாவிலும்/ஒரு சுகம் உண்டு.
‘பேசுவதற்கு நீ’ என்ற வரியைக் கவிதையிலிருந்து எடுத்துவிட்டால் கவிதையின் உருவம் குலைந்துவிடும். நகுலன் சுட்டுகிற ‘நீ’ உண்மையில் யார்? நகுலன் தனது உரையாடலை இந்த ‘நீ’யுடன்தான் சதா நேரமும் நிகழ்த்துகிறார். கவிதைக்குள் இந்த ‘நீ’ சில நேரங்களில் மறைந்தும் இருக்கும். ஆனால் நகுலன் எப்போதும்
அந்த ‘நீ’ யோடுதான் இருக்கிறார். நகுலனின் இருத்தல் வெளியே இந்த ‘நீ’ தான். அதனால்தான் ‘நண்பா இந்தச் சாவிலும் ஒரு சுகம் உண்டு’ என்கிறார்.
தனக்குள் ஓர் உரையாடல்
நகுலனுக்கு, தான் வேறு உலகம் வேறு அல்ல. நாற்காலியில் அமர்ந்தபடி பல மணி நேரம் தனக்குள் உரையாட முடிகிறது. அப்படியான உரையாடல்களைத்தான் அவரது கவிதையில் காண்கிறோம். ‘மழை: மரம்: காற்று’ நகுலனின் கவிதை மனதை அறிந்துகொள்வதற்கு எல்லா வகையிலும் உதவவல்லது. ‘அம்மா சொன்னது நினைந்து மனமோடுகிறது’ என்று இடையில் வரும் வரி நகுலனின் புதிர். வாழ்க்கையின் புதிரை வார்த்தைகளில் அதிரவிட்டு வாசக மனதிலும் ஒரு அலையை எழுப்பிவிடுகிற தன்மையே நகுலன். அந்தக் கவிதையின் சில வரிகள்,
பார்ப்பதற்கு ராமநாதன்/மாதிரி இருந்தார்/என்னைக் கேட்டார்/ “நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள்?”/“நான் என்னையே தேடிக்/கொண்டிருக்கிறேன்”/அவர்/“ஏன்” என்று என்னை மீண்டும் என்னைக்/கேட்டார்./மௌனம் என்னைக் கைதட்டி அழைத்தது.
இந்தக் கடைசி வரி நகுலனின் கவி மொழி. இந்த மௌனத்தை அவரது எல்லாக் கவிதைகளிலும் காணலாம். நகுலனின் இந்த மௌனம்தான் அவரது கவிதை ஆற்றல். ‘மௌனம் என்னைக் கைதட்டி அழைத்தது’ என்கிற வரியை வாசிக்கிறபோது மௌனம் ஒருவித உறவாக நெருங்கியிருப்பதை உணர்கிறோம். கைதட்டி என்ற சொல் மொத்த கவிதைக்கும் ஒரு வாசம் தருகிறது.
பிற்பகலில்/என் அறையில்/நான் தனியாக/ “கூ கூ”/என்று குரல் கொடுக்கும்/இந்தக் குயில் யாருக்கு/எதைச் சொல்கிறது.
‘லயம்’ என்ற தலைப்பிட்ட கவிதை. இந்தச் சொல்முறை அழகே நகுலன். குயில் தன் இயல்பில் கூவுகிறது. மொத்த இயற்கையும் அப்படித்தான். ஆனால் அவற்றின் இருத்தல் எப்போதும் ஒரு பயன்பாட்டில் இருந்துகொண்டே இருக்கிறது. நகுலனின் கவிதை நம்மை உயிர்களின் பொதுவெளிக்கு நகர்த்துகிறது. நகுலனின் தனிமை தனிமையே அல்ல. அது ஒருவகையான மனோவேளை (நன்றி பிரமிள்). இதை அறிந்துகொள்ள ஒரு கவிதை,
“இப்பொழுதும்/அங்குதான்/இருக்கிறீர்களா?”/என்று/கேட்டார்/“எப்பொழுதும் அங்குதான் இருப்பேன்”
இந்தக் கவிதை சுட்டுகிற ‘அங்கு’தான் நகுலன் எப்போதும் இருக்கிறார். அங்குதான் எல்லாமும் நடக்கிறது. குயிலின் கூ… கூ… விலிருந்து பிரபஞ்சத்தின் முழு வெளியும். அதனால்தான் தேகத்தை உரித்து கோட்-ஸ்டாண்டில் நகுலனால் தொங்கவிட முடிகிறது. எல்லா உயிர்களோடும் உறவுகொண்டு களிக்கிறது நகுலனின் மனம்.
க.வை. பழனிசாமி

