சிதம்பரத்தில் பிறந்த வெள்ளியம்பலவாண முனிவரின் உரை எழுதுவோரைப் பற்றிய கருத்து அறிமுகம்

எழுத்து தளத்தின் முது பெரும் எழுத்தாளரும், மரபுக் கவிதையின் முன்னணிக் கவிஞரும் ஆகிய சென்னை மாடம்பாக்கம் வாழ் திரு. எசேக்கியல் காளியப்பன் அவர்கள், சுந்தரமூர்த்தி சுவாமிகளின் ஏழாம் திருமுறைப்-பதிகங்களில் திருநாகேச்சரத்தின் அழகுகளைப் பாடக் கேட்டு, அதில் அமைந்துள்ள இயற்கை வருணனைகளை வைத்து (".." என்று குறியிட்டு, ’படிப்பவர் சிந்திப்பீரே’ என்ற தலைப்பில் இன்றைய நிலைக்காய் ஏங்கிப் பாடுவதாக அமைத்து எழுதிய பாடல்கள் எட்டு ஆகும். இப்பாடல்களுக்கு உரை எழுதும்படி திரு.எசேக்கியல் அவர்கள் என்னைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாடல்களுக்கு உரை எழுதுவது எளிதல்ல என்று அறிந்தும், தமிழில் தன் முயற்சியில் கற்ற சிற்றறிவைக் கொண்டு சிறுபிள்ளத்தனமாக நானும் முயற்சிக்கிறேன்.

சிதம்பரத்தில் பிறந்த வெள்ளியம்பலவாண முனிவர், தருமபுரம் ஆதீனம் நாலாவது குருமூர்த்தி மாசிலாமணி தேசிகரிடம் துறவு பெற்று, காசியில் வாழ்ந்து குமரகுருபர சுவாமிகளிடம் அணுகி பெரும் புலமை பெற்றவர். இவரது காலம் திருமலை நாயக்க மன்னர் வாழ்ந்த 17 ஆம் நூற்றாண்டு. இவர் திருச்செந்தூர் தலத்தைத் தரிசித்து, திருநெல்வேலியில் உள்ள சிந்துபூந்துறை மடத்தில் வாழ்ந்து உயர் கல்வியைப் போதித்து வந்துள்ளார்.

வெள்ளியம்பலவாண முனிவர் திருக்குறளுக்கு விளக்கமாகக் கதையமைப்புச் செய்து முதுமொழி மேல்வைப்பு என்னும் நூலை எழுதியுள்ளார். இவரது வழியிலேயே சிவஞான முனிவர் சோமேசர் முதுமொழி வெண்பா என்று அதிகாரத்திற்கு ஒன்றாக 133 வெண்பாக்கள் எழுதியிருக்கிறார்.

வெள்ளியம்பலவாண முனிவர், சிவஞான முனிவர் போல உபநிடதம், வேதம், ஆகமம் முதலியவற்றை மேற்கோள் காட்டி மாபாடியம் 'பேருரை' (Elaborate commentary) செய்துள்ளார்.

இவரது உரைத்திறனுக்கு எடுத்துக் காட்டு:

நூலின் சொற் சுருக்கத்தால், நூலாசிரியரது
அகத்தை தேர்ந்துணரலாம்; பொருட் பெருக்கத்தை
நல்கும் பேராற்றல் உடையவரே, உரையாசிரியர்
ஆவார்; நூலாசிரியர் செய்யும் உதவி
பேருணர் வினார்க்கே பயன்படும்; உரை
யாசிரியர் செய்யும் உதவி அப்பேருணர்
வினராக அவாவும், சிற்றுணர்வினர்க்
கெல்லாம் பயன்படும்; அவ்வாறு செய்யுந்
திறத்தில் உரையாசிரியர் மிக்க ஆற்றல்
வாய்ந்த வராயிருத்தல் வேண்டும் - (மாபாடியம், பக்கம் 176)

(தொடரும்)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Mar-16, 9:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 308

மேலே