தினம் தினம் வந்திடும் யாசகன் நானடி

தினம் தினம் வந்திடும் யாசகன் நானடி
உன் திருமுகம் நீயும் மறைப்பதும் ஏனடி
என் கண்களில் வழிவது
உன் நினைவெனும் தீயடி
என் கனவிலும் கூட
நீ ஒளிவது ஏனடி

என் ஊமை நெஞ்சம் பேசிடும் மொழிகள்
உன் செவிகளில் வந்து சேரவில்லையா...?
என் கண்கள் பேசிடும் கண்ணீர் மொழிகள்
உன் கண்களும் அதைதான் காணவில்லையா...?

முடியாத சாலையாய் உன் பயணம் போகுதடி
முடமாகி என்னிதயம் பாதி வழி நோகுதடி
விடியாத காலையாய் என்னுலகம் ஆனதடி
மழை படியாத பாலையாய்
என் மனமும் வேகுதடி

எந்த முனிவரின் சாபமடி
உன்னிதயம் அகலிகை கல்லென ஆனது
இனி எந்த இராமன் பாதம் தீண்டி
உன் இதயம் என்னை மீண்டும் நினைப்பது

என் விழிகளை கடந்திடும் வெண்ணிலவும்
என் வேதனை உன்னிடம் சொல்லிடுமோ
என் வலிகளை குடித்திடும் உன் நினைவெல்லாம்
வந்தென்னை சீக்கிரம் கொன்றிடுமோ?

காதலால் துடிக்கும் கன்று நானடி
கருனைக் கொலைதான் செய்து விடு
காலம் முடிந்தே போகும் முன்னே
என் கண்கள் கொஞ்சம் தூங்க விடு

கலப்பையில் சிக்கிய புழுவானேன்
கரை வந்து சேர்ந்த மீனானேன்
காதலியே உன்னாலின்று
நான் கண்ணீர் பூக்கும் மரமானேன்

இரவில் விழிக்கிறேன்
பகலை பகைக்கிறேன்
உன் நினைவோடு போரிட்டே
நான் நித்தம் நித்தம் இறக்கிறேன்

சகாரா விழிகளை நீதான்
சிரபுஞ்சியாக்கி சென்றாய்
சாகும் வரம் நான் கேட்க ததாஸ்து சொல்லிச் சென்றாய்

சாகும் வரம் நானும் கேட்க
ததாஸ்து சொல்லிச் சென்றாய்

எழுதியவர் : மணி அமரன் (9-Mar-16, 12:43 pm)
பார்வை : 591

மேலே