காதலே நிம்மதி

காதலே நிம்மதி..!!
அன்பு வசியம் வைத்து மயக்கத்தில் ஆழ்த்தி
நினைவுகளை களவாடிய பொழுதுகளில் எல்லாம்
காதல் இனிமையாகத்தான் தெரிகிறது ..!!
உனக்கு நான்தான் உலகம் என்றும்
எனக்கு நீதான் உலகம் என்றும்
அவனும் அவளும் கிடந்தபோதேல்லாம்
காதல் நிம்மதியாகத்தான் இருந்தது..!!
திருமணம் என்கிற போதான பேச்சுக்களில்
ஆரம்பிக்கிறது ஏழரையும் எட்டும்
இன்னும் என்னவெல்லாமோ..!
சாதிப் பேய் முகம் காட்டி பயமுறுத்தியபோது
வேப்பிலை அடித்து ஓட்டமுடியாமல்
காதலின் நிம்மதி தொலைந்தேதான் போகிறது..
சமயங்களில் உயிர்களும்..!!
வம்பு வழக்கில்லாமல் காதலிக்கலாம்
வீட்டில் மலரும் வண்ண மலர்களை..!!
கேள்வியே இன்றி காதலிக்கலாம்
கன்னம் குழிய சிரிக்கும் மழலைகளை..!!
காதலிக்க உள்ளது எவ்வளவோ..!
வானம் வானத்தில் நிலவு
நிலவு சுற்றிய தாரகை
கடல், கடற்கரை, அலைகள்
கடல் நீந்தும் படகுகள்..!
தேடிச் சென்றுதான்
காதலிக்க வேண்டுமா என்ன??
கையடக்க அலைபேசிகளில்
இனிய கீதங்கள்..
பாசமாய் முகம் வருடும்
செல்லப் பிராணிகள்...
தோட்டத்துப் பூக்கள்
அதில் தேன் நுகரும் வண்டுகள்...
சன்னலோர சிட்டுக்குருவி
மரத்தில் அமரும் குயில், கிளி
அனைத்தையும் காதலிக்கலாம்..
தீங்கு நேர்வதில்லை..!
மனிதரிடத்தே கொள்வது மட்டும் காதலில்லை
இயற்கையோடு கலந்து
மெய்மறந்திருப்பதும் காதல்தான்..
காதலிக்கலாம் கட்டுப்பாடுகள் இன்றி..
காதலியுங்கள் இயற்கையை
நிம்மதியாக..!
(கடந்த மாதம் "கவிதைச் சிறகுகள்" இலக்கிய
அமைப்பு நடத்திய கவி அரங்கில் வாசித்த கவிதை.
தலைப்பினை அளித்த அமைப்பிற்கு எனது நன்றி..)