காலச்சுவடுகள் 8 கவித்தாசபாபதி

நினைவுகளின் கிளையில்தினம்
--ஏங்குகின்ற கிளி - இது
கனவுகளுக் காகவே
--தூங்குகின்ற கிளி

ஆசைகளின் முகடுகளில்
--அலைபாயுங் கிளி - இது
அச்சத்தின் பள்ளங்களில்
---நிலைசாயுங் கிளி

எல்லையற்ற பெருவெளியை
--ஏகிவரும் கிளி - பின்
இல்லாத இருளடையும்
--இனம்புரியா கிளி

பொல்லாமை கண்டுதினம்
--பதைக்கின்ற கிளி - இது
சொல்லாத கதைகள்பல
--சுமந்திருக்கும் கிளி

பாவங்களை ரகசியமாய்ப்
--பொத்தியழும் கிளி - இது
பலவண்ண முகம்காட்டி
--பரிகசிக்கும் கிளி

நெஞ்சத்தின் மேற்புறத்தில்
--துஞ்சுகின்ற கிளி - இது
நாளைய கவலைகளில்
--அஞ்சுகின்ற கிளி

நொடிக்கு நொடி நிதம்
--நிறம் மாறும் கிளி - இது
நொடிந்தால் புழுபோல
--நெளிகின்ற கிளி

சருகுகளால் அல்ல
--சொந்தங்கள் பூத்த
பூக்களால் கூடு கட்டும்
--பிரியமான கிளி

துடிப்பெல்லாம் ஆயிரம்
--உணர்ச்சிக ளானாலும்
அடிநாதம் அன்பேயென்(று)
--ஓதுகின்ற கிளி


இம்மாப் பெருவாழ்வின்
--ஏகாந்த வானில்
செம்மாந்து திரியட்டுமே - இந்த
--'மனம்' என்ற கிளி ...!


-கவித்தாசபாபதி

எழுதியவர் : கவித்தாசபாபதி (24-Mar-16, 5:42 pm)
பார்வை : 145

மேலே