உனக்கென பிறந்தவள்

உனக்கென பிறந்தவள்

ஞாயிற்றுகிழமை மாலை நேரம். மொட்டை மாடியில் துணி காயபோட்டு கொண்டிருந்தார்கள் ஸ்ரீமதியும் மேகலாவும். மேகலா ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவாறே வேலையை செய்தாள். அவ்வப்போது வாய் முணுமுணுத்தது, கோவமாக தென்பட்டாள். திடீரென சுவரில் சாய்ந்து அப்படியே நின்றேவிட்டாள்.

ஸ்ரீமதி துணி அனைத்தையும் உலர்த்தி விட்டு, மெதுவே மேகலாவின் அருகே வந்து நின்றாள். அதைக்கூட கவனிக்காது சிந்தனையில் ஆழ்ந்து இருந்தாள் மேகலா. “என்னடி ஆச்சு ஏன் கோவம் யார்மேல கோவம்.” சுயநினைவுக்கு வந்தவளாய் “ஒண்ணுமில்ல அக்கா” என்று கூறி நகர்ந்தாள்.

பின்னே சென்றாள் ஸ்ரீமதி “ஏய் சொல்லுடி... அம்மா எதாச்சும் சொன்னாங்களா?” என்றாள். “இல்லக்கா,. நான் வேலை செய்ற பாக்டரிலே ஒரு புது சுபெர்வைசர் வந்த்ருகான், அவனும் அவன் மூஞ்சியும்... அவன் மேல தான் கோவம்”.
“அவன் எண்ண பண்ணான்?” அக்காவுக்கு இன்னும் ஆர்வம் பெருக்கெடுத்தது.

“அம்மா கிட்ட சொல்லாதே...அப்புறம் வேலைக்கே அனுப்பமாட்டாங்க.” என்றவள் தொடர்ந்தாள்.
“ஒரு மாசம் ஆகுது புதுசா சேர்ந்து... ஆனாலும் எப்பவும் என்னையே பார்க்கிறான். மேடம் எதாவது டவுட் இருந்தா என்ன கேக்க சொல்லிட்டாங்க. அதனால எப்பவும் எதையோ சாக்கு வச்சு சந்தேகம் கேக்க வருவான். நேத்து பக்கதுல வந்து நின்னுகிட்டு ஒன்னும் பேசாம என்னையே பாத்துகிட்டு நின்னான். கோவம் வந்துது பாரு... நல்ல கேட்டு விட்டேன்....
இதபாரு சும்மா வந்து இப்படி நிக்காத எனக்கு இதல்லாம் பிடிக்காது. எதாவது டவுட் இருந்தா அப்படி நின்னு கேளு... நான் இங்க வேலைக்கு வரேன்னு இளக்காரமா நினைக்காதே. இப்படியே உன் நடவடிக்கை இருந்திச்சின்னா மேடம் கிட்ட சொல்லிடுவேன் ஆமா....”என்று நல்லா பிடி பிடின்னு பிடிச்சு கேட்டுவிட்டேன். அப்பவும் நகராம நின்னுகிட்டே இருந்தான். நான் ஒரு மொற மொறச்சவுடனே தான் போனான்”.

ஸ்ரீமதி பேசினாள். “சொல்லிட்டே இல்ல விடு. இதுக்கு மேல தொந்தரவு கொடுத்தா மேடம் கிட்ட சொல்லிடு. இதுக்கு ஏண்டீ மூஞ்சிய உர்ருன்னு வச்ருக்க. அம்மா பாத்தா என்ன ஏதுன்னு கேப்பாங்க.” தொடர்ந்தாள் ஸ்ரீமதி
“வேலைக்குன்னு போய்ட்டா நாலு பேரு இப்படி தான் இருப்பாங்க. நாம நம் வரைமுறைய தாண்டாம பக்குவமா நடந்துக்கணும். இது தான் நான் ன்னு மத்தவங்களுக்கு புரிய வச்சிட்டா போதும். யாரும் அனாவச்யமா தொந்தரவு பண்ணமாட்டாங்க. ரெண்டு கை தட்டினா தான் ஓசை வரும். நாம இடம் குடுக்கலேன்னா ஒன்னும் நடக்காது. நீ கவலை படாதே கோவமும் படாதே. கோவத்துல எடாகூடமா எதாச்சும் செய்யாத. என்ன நான் சொல்றது புரியுதா..? “அவள் பேசிக்கொண்டே இருக்கையில் மேகலா கண்கள் விரிந்தது.... எட்டி சாலையில் பார்த்தாள். ஒரு பெண்மணியும் 3 ஆண்களும் அவர்கள் வீட்டு கதவருகே வந்து கொண்டிருந்தனர். யாருடீ என்றாள் ஸ்ரீமதி. “அவன் தான் புது சுபெர்வைசர் .. வீட்டுக்கே வர்ரானா...அவனை” என்று கோவமாக படியிறங்க சென்றாள் மேகலா. “ஏய் இரு....இரு... நான் போய் பாக்கறேன் நீ இங்கேயே இரு நான் கூப்பிட்டா வா..” என கூறிவிட்டு தூக்கி சொருகிய புடவையை சரி செய்து கொண்டே கீழே சென்றாள் ஸ்ரீமதி.

வாசலில் எட்டி பார்த்த பெண்மணி.... ஸ்ரீமதியை கண்டதும்.... “அம்மாவ கூப்பிடு ம்மா” என்றாள். அம்மாவை தேடி வந்திருக்கும் பெண்ணை எப்படி கடிந்து கொள்வது. அம்மாவிடம் துணி தைக்க கொடுக்க வந்திருப்பார்களோ?

“வாங்க வாங்க உள்ளே வாங்க. அம்மா அக்காவோட பக்கத்தில கோயிலுக்கு போயிருக்காங்க” என்று பாயை விரித்து உட்கார செய்தாள். உள்ளே சென்று 4 க்ளாசில் மோர் எடுத்து வந்து கொடுத்தாள். அவளோடு வந்திருந்த ஆண்களில் யாரு சுபெர்வைசர் ன்னு தெரியாமல் ஸ்ரீமதி குழம்பினாள். யாரும் பேசாமல் அமைதியாய் இருந்தனர். வந்த பெண்மணி மட்டும் ஒருவனிடம் கண் காட்டி ஏதோ செய்கை செய்தாள். அவனோ... இல்லை என்பது போல் தலை அசைத்தான். இதை கவனிக்காதது போல் ஸ்ரீமதி “என்ன விஷயமா வந்த்ருகீங்க? என்று கேட்டாள். அவள் பதில் பேசாம மழுப்பலாக சிரித்தாள்.

அதற்குள் மேகலா கோவத்தோடு விடுவிடுவென்று இறங்கி வந்து விட்டாள். அவள் பேச தொடங்குவதற்குள் வந்தவர்களில் ஒருவன் பேசத் தொடங்கினான். “என் பேரு அன்புமணி, மேகலா வேலை செய்யற பாக்டரில நான் சுபெர்வைசர். இது எங்க அம்மா அப்பா, இவரு என் மாமா”. இதை சொல்வதற்குள் மேகலாவின் தாய் உள்ளே வந்தாள். வாங்க வாங்க.... யாரு நீங்க என்ன விஷயம்? என்று கேள்விகளை எழுப்பினாள்.

“நான் சொல்றேன்மா... உங்க மகளை பொண்ணு கேட்டு வந்த்ருகோம்” என்று தன் கையில் பழம் பூ வோடு இருந்த கூடையை நடுவில் வைத்தாள் அந்த பெண்மணி.

மேகலா வெகுண்டாள் ...” யார கேட்டுகிட்டு இப்படி பொண்ணு கேட்டு கிட்டு வந்த்ருகீங்க ன்னு எனக்கு தெர்யும் முதல்ல இதையெல்லாம் எடுத்திகிட்டு கிளம்புங்க” என்று ஆவேசமாய் கத்தினாள்.

அவள் அம்மா.. நிலைமையை ஊகித்தாள் மேகலாவை பெண் கேட்டு வந்திருக்கிறார்கள் என்று புரிந்துக் கொண்டாள். மேகலாவை அமர்த்திவிட்டு... “ஏன்மா எனக்கு நாலு பொண்ணுங்க இதோ நிக்கறது வளர்மதி என் மூத்த பொண்ணு, அடுத்து ஸ்ரீமதி... மேகலா மூணாவது... வெண்ணிலா ஸ்கூல் படிக்குது. இப்படி திடீர்னு வந்து பொண்ண குடுங்க ன்னா எப்படி. நாங்க இப்போ மேகலாவுக்கு கல்யாணம் பண்ற எண்ணத்தில் இல்லை. நீங்க கிளம்புங்க” என்றாள்.

வந்த பெண்மணி புன்முறுவலோடு... “இல்லம்மா நீங்க தப்பா புரிஞ்சிகிட்டீங்க... நாங்க பெண் கேட்டது என் தம்பி வேலுமணிக்கு வளர்மதியை தான். என் பையன் மேகலாவோட வேலை செய்யறான். அவன் எல்லாம் சொன்னான். உங்க குடும்பத்தை பத்தி நானும் கேட்டு தெரிஞ்சிகிட்டேன். அப்பா இல்லாத இந்த பிள்ளைகள எப்படி கஷ்டப்பட்டு வளக்கரீங்கன்னு தெர்யும். நீங்க தையல் வேல செய்றீங்க... இரண்டாவது மக டீச்சர் மேகலாவும் வேலை செய்யுது. சின்னதா கோவில்ல கல்யாணத்த செஞ்சா கூட எங்களுக்கு போதும். என் தம்பி ஒரு பாங்க்ல பியூன் வேலை செய்றான். உங்க மகளை நல்லா வச்சிப்போம்” என்று அன்பாய் பாசமாய் வளர்மதியை பார்த்தாள்.

மேகலாவின் தாயோ, வளர்மதியவா?...என்று கேட்டுவிட்டு கண்களில் நீர் விட்டாள். “அவளுக்கு உடம்பு சுகம் இல்லீங்க,... பிட்ஸ் வரும்”. என்று கண்களை தொடைத்து கொண்டாள்.
“நானும் ஒரு நர்ஸ் தான், எனக்கு தெர்யும் பிட்ஸ் ஒரு நோய் இல்லம்மா, அதற்கும் மருந்து மாத்திரை இருக்கு. குணப்படுத்தலாம். நானும் ஒரு உண்மைய உங்க கிட்ட சொல்றேன். என் தம்பிக்கு இடது கை கொஞ்சம் சிறுசா இருக்கும். பிரசவத்ல கோளாறு. அம்மா இவன பிரசவிச்சிட்டு செத்துட்டாங்க. நான் தான் வளர்த்தேன். அப்பா கிராமத்துல இருக்காங்க. உங்களுக்கு எதுவும் ஆட்சேபனை இல்லைனா எங்களுக்கு பொண்ணு பிடிச்சிருக்கு. நீங்களும் விசாரிச்சிட்டு எங்களுக்கு தெர்யபடுத்துங்க. ஒன்னும் அவசரம் இல்லை. நாங்க அப்போ வரோம்”. என்று எழுந்தனர்.

மேகலாவின் தாயோ.... கண்களை தொடைத்தவாறே “இருங்க காபி சாப்பிட்டு போலாம்” என்றாள். “இல்லமா மோர் குடிச்சிட்டோம். போதும்”. என்று சொல்லிவிட்டு வளர்மதியின் கையில் இருந்த கோவில் பிரசாதம் கும்குமத்தை எடுத்து இட்டுகொண்டாள். அவள் நெற்றியிலும் அன்பாய் வைத்தாள். அவள் மற்றொரு கையில் இருந்த சக்கரை பொங்கலையும் கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுகொண்டாள். “நல்லா இரும்மா”. என்று வாழ்த்திவிட்டு நகர்ந்தாள்.

ஒருவர் பின் ஒருவராக வெளியே சென்றனர்... உறைந்து நின்றிருந்த மேகலாவின் அருகே வந்து அன்புமணி...
“இந்த பொன்னும் நல்லா தான் இருக்கு. ஆனா நான் இப்படி யோசிக்கலையே. ஐடியா கொடுத்ததுக்கு தேங்க்ஸ்” .... என்று நக்கலாக நகைத்துவிட்டு அவள் காதில் தொங்கும் ஜிமிகியை தட்டிவிட்டுவிட்டு சென்றான்.
மேகலாவின் சிந்தையில் அன்புமணி மேலே உயரே சென்று மேல்படியில் நின்றான்.

எழுதியவர் : சுபா சுந்தர் (31-Mar-16, 1:50 pm)
சேர்த்தது : சுபாசுந்தர்
பார்வை : 332

மேலே