திசை மாறாத காலங்கள்__ குமரேசன் கிருஷ்ணன்
உன் பெயரின்
முதல் பாதியில் ஆரம்பிக்கும்
என் மகளின் பெயர்க்கண்டு
முதலில் நீ அதிர்ச்சியுற்றிருக்கலாம்
தற்போது பழகியிருக்கக்கூடும்..
இருவேறு நதிகள்
ஓரிடத்தில் சங்கமித்தால்
நிகழும் சலசலப்பும்
ஆழ்ந்த அமைதியும்
நிறைந்ததாய் நாம் சந்தித்த
நாட்கள் கடந்திருந்தன...
இரயில் தண்டவாளங்களின்
இணைகளாய் நீண்டதூரம்
இளமையில் பயணித்தோம்...
கிழக்கு நோக்கியும்
மேற்கு நோக்கியும்
பிரியும் பறவைகள் போல்
காலம் நம் காதலின்
திசைகளைத் திருப்பிற்று
இரக்கமற்ற ஓர் இளவேனிலில்...
சுவரில் எறியப்பட்ட பந்து
சட்டெனத் திரும்புவது போல்
சில சந்தர்ப்பங்கள்
திருப்பி அனுப்பியது
என்னை என்னிடத்திற்கே...
இலைகளை உதிர்த்துவிட்டு
மொட்டையாய் நிற்கும் மரமாய்
தனித்துக் கிடந்தேன்
நாம் நடமாடிய சுவடுகளில்...
ஓர் மழைக்காலம்
கடந்த பின்னர்
துளிர் விட்டன இலைகள்
வெறிச்சோடியே கிடந்தன
என் மனவெளிகள்...
உன் திருமணச் செய்திகேட்டு
இரண்டுபட்ட என் இதயத்தின்
ஓசைகள் இரவைக் குத்திக்கிழித்து
குரூரமாய் விழித்திருக்க...
பூட்டிய வீட்டிற்குள்
கவலைகள் அப்பிக்கிடந்த
என் முகத்தின் ரேகைகள்
சாளரத்தின் வழி விழுந்த
சிட்டொன்றின் சிறகசைத்த
தேன்தேடலில் வெளிச்சம் தேட...
மெல்லிய கீற்றின்ஒளி
இருளை விரட்டும்
இரகசிய வேட்கையாய்
என் சுயங்களின் ஈர்ப்பு
என்னை என்னுள் உயிர்ப்பிக்க...
நான்..
என் மனைவி
என் குழந்தைகளென
எனக்கான உலகம்
சுறுசுறுப்புடன்
இயங்கத் துவங்கியது...
என் மகளின்
பள்ளிச் சேர்க்கையில்
எதிர்பாராமல்
உன்னைச் சந்தித்த நொடியில்
விண்ணப்பப் படிவத்தில்
அவள் பெயர் எழுதும்
உன் கைகளின் நடுக்கத்தை
என் கண்களின் நீர்த்திவலைகள்
கழுவிக்கொண்டிருக்க..
நம்மைச் சுமந்துக்களித்த
நம் காதல்
நம்மைச் சந்திக்காமலே
கடத்தியிருக்கலாம்
காலத்தை வேறுதிசையில்...?
--------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்