நேற்று இல்லாத மாற்றம்
நேற்று இல்லாத மாற்றம் - 1
அலுவலகத்தின் வாசலை கடந்து உள்ளே நுழைந்தேன். அனைவரும் அவரவர் இருக்கையிலேயே அமர்ந்து, ஏதோ கொடுக்கின்ற ஊதியத்துக்கு குறைவாக சிலரும், கொடுத்த ஊதியத்துக்கு மேலே பலரும் தங்கள் அலுவல்களை கவனிக்க தொடங்கினர். என்றுமே சரியான நேரத்துக்கு வந்து விடும் நான், அன்று மட்டும் பத்து நிமிடம் தாமதமாக வந்தேன்.
வழக்கமான காரணம் என்று எதுவும் இல்லை. வீட்டை விட்டு கிளம்பும் முன், டிவியில் மனதை உருக்கிய இளையராஜாவின் மெல்லிசையை கேட்டு பாடிக் கொண்டு வந்ததால் வந்த வினை.
வாழ்வில் நமக்கு நடைபெறும் அனைத்து நிகழ்விற்க்கும் வலுவான காரணம் ஒன்று உண்டு என்பதை நான் உணர்ந்த நாள் அது. காலடி எடுத்து வைத்து, ஒரு முனையில் திரும்பியதும் என் பார்வைக்கு இலக்கானது இரு கண்கள். ஒரு நொடி பார்வையில் மனதில் பதிந்த கண்களுடன் நான் நிற்க, இளையராஜா அந்த பாடலை எனக்காகப் பாடினார். கருமை சூழ்ந்த வானில், முத்தினம் வள்ர்ப்பிறையாய் நெற்றியின் கீழ் இரு விடி வெள்ளியான கண்களை கண்டு சொக்கி நின்றது, என்னுள் நேற்று இல்லாத மாற்றம்.....
அலுவலகத்திற்க்கு புதிதாய் வந்த பெண்ணைப் பற்றி தெறிந்துக் கொள்வது மிகவும் எளிது. வெகு சீக்கிரத்திலேயெ ஒருவன், தனக்காக எல்லா விவரங்களையும் சேகரித்து வைத்திருப்பான். அந்த தனி ஒருவனை கண்டுப்பிடிக்க வேண்டும். அதுவும் சுலபம்தான், அந்த பெண் இருக்கிமிடத்தை சுற்றி யாருடைய நடமாட்டம் அதிகமாக இருக்கிறதோ, அவன் தான் நாம் தேடிய அந்த தனி ஒருவன்.
அவனிடம் இருந்து முக்கியமான பின்வரும் மூன்று தகவல்களை பெற்றுக் கொண்டேன்.
1. அவள் பெயர் என்ன? – ஜனணி.
2. எங்கிருந்து வருகிறாள்? – தாம்பரம்.
3. முன்னாள் (அ) இன்னாள் காதல் ஏதாவது? – இன்னும் தெறியவில்லை.
அதற்கு மேலும் சில தகவல்களை தந்த அவனை கவனியாமல் அடுத்து என்ன செய்ய போகிறோம் என்ற எண்ணங்களுடன் நடந்து வந்து கொண்டிருந்தேன். அப்போது, ரொம்ப நாளாக நான் பார்வை வீசி, கடந்த இரண்டு தினங்களாக என்னை பார்க்க ஆரம்பித்துக் கொண்டிருந்த பெண்ணை மதிக்காமல் நடந்தது, என்னுள் நேற்று இல்லாத மாற்றம்.....
இன்னும் வேலையை முடிக்கவில்லையே என்று மேலதிகாரி துடுக்கும் வரை அந்த கண்களையே நினைத்துக் கொண்டிருந்தது, என்னுள் நேற்று இல்லாத மாற்றம்.....
பூமியின் காந்த சக்தி ஆதாரம் அவளது கறுமை நிறக் கண்கள்!!
உண் உறக்கமின்றி அவளது கயல்களில் கரைந்து விடுவதாய்!!
என்று கவிதை பாடியது, என்னுள் நேற்று இல்லாத மாற்றம்.....
பற்பல அறிய சிந்தனைகளுக்குப் பிறகு, அவளின் காத்திருப்போர் பட்டியலில் இணைந்து விடலாம் எண்றெண்ணி, அவளுடைய போன் நம்பரை ரகசியமாய் எடுக்க ஒற்றன் வேலைப் பார்த்தது, என்னுள் நேற்று இல்லாத மாற்றம்.....
வெள்ளி போன்ற கண்களில் மையிட்டால், விக்கிரமாதித்தனின் சிம்மாசனத்தை தாங்கிய முப்பதினென் பதுமைகளில் ஒன்று தான் தப்பி வந்ததோ!! என்கிற எண்ணங்கள் எழலாம், என்று குறுந்தகவல் அனுப்பியது, என்னுள் நேற்று இல்லாத மாற்றம்......
அதோடு மட்டுமல்லாது தைரியம் ஊற்றெடுத்து, போன் செய்து இது நீ தானா? என்று பல முறை கேட்டுப் பதில் வராமல் பைத்தியக்காரனாய் சந்தோசப்பட்டது, என்னுள் நேற்று இல்லாத மாற்றம்.....
பிரித்து அடித்த மழையில் காணமல் போன சென்னையின் அடையாளங்களை எல்லோரும் தேடிக் கொண்டிருக்க, பத்திரமாக இருக்கிறாயா? என்று நான் அனுப்பிய குறுந்தகவலுக்கு, “இருக்கிறேன்... நீயும் இருப்பாய்” என்ற மறு மொழியில் ஆனந்த மழையில் நனைந்து, மீண்டும் சென்னையில் வெள்ளம் வாராதா? என்ற சுயநலவாதியாய் நான் மாறியது, என்னுள் நேற்று இல்லாத மாற்றம்.....
கனவில் காதல் வளர்த்து. ஆனால், அவளை பார்க்க நேரிடும் போதெல்லாம் சூரிய கிரகணத்தன்று காணாமல் போன் ஆதவன் போலானது, என்னுள் நேற்று இல்லாத மாற்றம்.....
இதையெல்லாம் தாண்டி, அந்த வேழ் விழிகளால் என் இதயத்தை கிழித்து குருதியில் நனைத்து காதல் என்ற கருணை கொலை செய்ய மாட்டாளா? என்று காத்துக் கொண்டிருப்பது, என்னுள் நேற்று இல்லாத மாற்றம்.....
நேற்று இல்லாத மாற்றம் – 2
அப்படி இப்படி என்று என்னுடைய காதலை?, அவளை தவிர எல்லோரிடமும் சொல்லியாகிவிட்டது!. நண்பர்களும் அதை கொஞ்சம் சிரமப்பட்டு எடுத்துக் கொண்டு, அடிக்கடி அவள் என் இடத்தை கடந்து செல்கையிலே குறிப்பு சொல்லி, மனச் சஞ்சலப்பட்டு நான் கவனிக்கையில் கம்பன் பாடினான்.... அண்ணலும் நோக்கினான்.... அவளும் நோக்கினாள்....
அலுவலகத்தின் மதிய உணவு வேலை, பலர் வயிற்றில் புளியையும் எனக்கு மட்டும் பாலை வார்க்கும். என் கண்களும் இதயமும் சாப்பிட்டுக் கொண்டு ஏதோ சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும். என் உடல் உணவையும், என் உள்ளம் அவளது உயிரையும் எடுத்துக் கொண்டிருக்கும் நேரம், தோழியின் சீண்டலால் என்னை திரும்பி முறைக்கையில் கம்பன் பாடினான்.... அண்ணலும் நோக்கினான்.... அவளும் நோக்கினாள்....
நண்பர்களுடன் காபி குடிக்கும் போது அடித்த அரட்டையினூடே, உள்ளே நுழைந்த அவளின் பார்வை வெப்பம் தாளாமல் அமைதியாக நான் வெளியேறி திரும்பிப் பார்க்கையில் கம்பன் பாடினான்.... அண்ணலும் நோக்கினான்.... அவளும் நோக்கினாள்....
அலுவலகம் முடிந்து செல்கையில், பேருந்தின் முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் அவளின் “மாலைக் கதிரவனின் ரம்மிய வதனத்தை போல் களைப்படைந்த முகத்தை” கண்டதும் வண்டியை முறுக்காமல் ஊர்ந்து சென்ற என்னைக் கண்டுக்கொள்ளாமல் விழித்திரையை மட்டும் விலக்கிப் பார்க்கையில் கம்பன் பாடினான்.... அண்ணலும் நோக்கினான்.... அவளும் நோக்கினாள்....
“அவளுடையது திமிரான பார்வை” என்று பேச்சை ஆரம்பித்த நண்பனை வழிமறித்து, “தெளிந்த நீரோடையில் சந்திர பிம்பத்தின் வெள்ளியழகில் அதன் கரும்பள்ளங்கள் தெரிவதில்லை. அப்படி தெரிந்தால் அதுவும் அழகு தான். மிகவும் அழகான பெண்களிடம் இருக்க வேண்டிய குணாதிசயம் தான்”. என்று விளக்கம் குடுத்த என்னை உற்றுப் பார்த்த அவன், அன்றிலிருந்து இன்று வரை அவளைப் பற்றி பேசுவதையே நிறுத்திக் கொண்டான். என்னுடைய வர்ணனை பிடிக்காமல்.....
காதலியை பற்றிய வர்ணிப்பு மற்றவர்களுக்கு வேண்டுமானால் கோபத்தையும் எரிச்சலையும் கிளப்பலாம். ஆனால், காதலனுக்கோ “சொர்க்கத்தின் வாயிலை கண்டாலும், அவளுடைய வனப்பினிலேயே சொக்கி கிடக்கும் பாக்கியத்திற்க்கு ஈடாகாது”. என்று என்னைப் போல் எழுதிக் கொண்டிருப்பான். முதல் நாள் பயில செல்லும் குழந்தையின் கையில் கிடைத்த சிலேடையின் முதல் கிறுக்கள்களாய்!, அவளது பெயரை இன்னமும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
“கவிகளின் காவியத்தில், சொல்லியிருக்கக் கூடிய வர்ணனைகள் இவளுக்காக தான்” என்று நான் மொட்டை மாடியின் நிலவொழியில் சிந்தித்துக் கொண்டிருந்த மகிழ்ச்சியான தருணங்களை மின்னல் புகைப்படமாக பதிவு செய்தது. என்னுடன் சேர்ந்து மேக கூட்டங்களும் சிரித்து மகிழ்ந்தன. சிறிது நேரத்தில் அவளுடைய தாமரை வதனத்தின் புன்சிரிப்போடு, பூம(மா)ழையில் நனைந்தது புதிய கற்பனை சிகரம் எனக்கு.
சீரற்ற காட்சிகளை காணும் போது, மனது தானாகவே ஒரு பரிச்சயமான உருவத்தை நினைக்கும் (ஆங்கிலத்தில் அதை paraidolia என்று அழைப்பர்). அப்படி என் வாழ்வில் எங்கும் எதிலும் அவளை கண்டு ரசித்தது, “மழை சரிவினில் பாயும் வெள்ளத்திற்க்கு ஒப்புமை!”.
காட்சிப் பிழைகளாக என்னுள் வட்டமிட்டுக் கொண்டிருந்த, அவளின் நினைவுடனேயே பாவமாக முகத்தை மாற்றி ஏறிட்ட போது, அவளையும் மீறி எட்டிப் பார்த்த குறுநகையை கண்டதும்! அவளுடைய மனதின் சிறு ஒரத்தில் இருக்கும் என்னை எப்படி விசுவருபமாக்குவது என்ற எண்ணத்தில் நடந்து திரும்பி பார்க்கையில் கம்பன் பாடினான்.... அண்ணலும் நோக்கினான்.... அவளும் நோக்கினாள்....
உற்று உற்றுப் பார்த்தால் தான் முறைக்கிறாள். இனி எக்காரணம் கொண்டும் பார்க்கக் கூடாது என்ற பெரு மூளையின் முடிவை, சிறு மூளை அடுத்த நாளிகையே கேட்காமல் அவளை வைத்த கண் வாங்காமல் வெறித்துப் பார்க்கையில் கம்பன் பாடினான்.... அண்ணலும் நோக்கினான்.... அவளும் நோக்கினாள்....
உலகிலேயே மிகவும் மென்மையானது பூக்கள் தாம். அவற்றையெல்லாம் மாலையாக்கி அதனினும் மென்மையான என்னவளிடம் சேர்த்து காதலை சொல்ல முடியும் என்ற நினைப்பினில் நாட்கள், “நடுக் கடலில் உதவிக்காக தூக்கி எறியப்பட்ட கண்ணாடிக் குடுவையாய்” நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
நேற்று இல்லாத மாற்றம் – 3
கடந்த சில நாட்களின் விடியல்கள் போல் இன்று இல்லை. “என்ன? நம்மை சீண்டாமல் செல்கிறான். ஏதும் பிரச்சனையா?” என்ற கண்ணாடியின் கேள்விக்கு பதில் சொல்ல தெரியமல் தடுமாற்றத்துடன் அலுவலகம் கிளம்பினேன்.
தினமும் எனக்காகவும் என் காதலுக்காகவும் வேண்டிக் கொள்ளும் பிள்ளையாரிடம், இன்று பார்வை மட்டும் வீசிய போது அவரின் முகத்தில் தெரிந்த புண்சிரிப்பிற்க்கு விடை தராமல் நடையை வேகப்படுத்தினேன்.
அலுவலகத்தின் உள்ளே நான் எப்பொதும் செல்லும் பாதையில் என்னை வித்திட்ட கால்களின் போக்கை சற்றே சிரமப்படுத்தி, வேறு திசையில் செலுத்திய போது, என் எண்ண ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், எதிர் கேள்வி கேட்ட உடல் உறுப்புகளுக்கு விடை தெரிந்தும் சொல்லாமல் நடந்தேன்.
ஆம்! விடை இதுதான். அவள் இனி என் வாழ்வில் இல்லை. நான் முன்னமே குறிப்பிட்டது போல், இது என்னுடைய காதல்! என்ற சுயநலவாதியாய் இருந்தேன். ஆனால், அது அனைவருக்கும் பொதுவுடைமை என்றுப் பொட்டில் அறைந்து சென்றது. வெண் மேகத்தில் வெள்ளை நிறமாய் மாறியது என் காதல். மணம் வீசாத பூக்களாகவும் மாறிப் போனது என் காதல்.
காதலின் காற்றாட்டு வெள்ளத்தில் கரையேற்றப்பட்ட காய்ந்த மரமாக நான், அதே காதல் நதியின் அலைப் படுகையில் பயணம் செய்யும் வெண்சங்காய் அவள். கரையிலேயே நின்று விட்ட நான் அவளை பிடிக்க நினைப்பது, கொட்டி விட்ட வார்த்தைகளை காற்றில் தேடுவதற்கு ஒப்பு.
அவளையும் என்னையும் உருவகப்படுத்தி, ரசித்து மகிழ்ந்த நட்சந்திரங்களில் ஒன்றை காணாமல் கழிந்த இரவில், என் கண்ணிமைகளின் தவிற்ப்பிற்க்கு என்ன காரணம் நான் சொல்ல....
முன்மாலைப் பொழுதில் அவளை பின் தொடர்ந்து சென்று நிகழ்ந்த, நிழல்களின் சங்கமத்தில் அடைந்த சிற்றின்பத்தை, நிஜத்தில் அடைய முடியாதே? என்ற என் இதய துடிப்பிற்க்கு என்ன காரணம் நான் சொல்ல....
கொஞ்ச தினங்களாக சந்தோச கீதங்களை இசைத்துக் கொண்டிருந்த என் காதல் நரம்புகளிடம் புரிய வைத்த என்னால், உதிரத்தின் அணுக்களில் உறைந்து போனவளை விடுவிக்க என்ன காரணம் நான் சொல்ல….
கண்ணாடி இதயமாய் இருந்திருந்தால் உடைத்தெறிந்திருப்பேன்! மாறாக அவளுடனான நினைவுகளை சுமந்து இறுகி பாறையாகி விட்ட இதயத்தை இளக செய்ய! என்ன காரணம் நான் சொல்ல….
நீ உதிர்த்த சிரிப்பை பார்த்து, தினமும் துடித்து வந்த இதயத்திடம் என்ன காரணம் சொல்லி நாளை துடிக்க வைப்பது....
உன் பின்னே பலமுறை நடந்து, உனக்குள் சென்று வந்த மூச்சுக் காற்றை சுவாசித்து! பிடித்து வைத்திருந்த என் பாரமில்லா உயிரை என்ன காரணம் சொல்லி நிறுத்தி வைப்பது....
உனை காணும் வரை நிஜ உலகிலும், கண்ட பின் கனவுலகிலும் மாறி மாறி திரிசங்கு சொர்க்கமாய் வாழ்ந்த என் வாழ்க்கையை என்ன காரணம் சொல்லி தொடர்வது....
மீண்டும் வளர்பிறை காணாத நிலவாய், தோய்ந்து போன காதலின் இடம் தேடி, கொந்தளித்துக் கொண்டிருக்கும் என் மன அலை கடலிடம் என்ன காரணம் நான் சொல்லி சாந்தப்படுத்த….
உன் ஓர விழிப் பார்வைக்காக காத்திருந்த போது, துடிக்காத நெஞ்சத்தை, ஒரே ஒரு முறை பார்த்து தொலைந்ததனால், இப்போது ஓயாமல் துடித்துக் கொண்டிருப்பதை, என்ன காரணம் சொல்லி நிறுத்துவது....
அவளின் குறும்பார்வையில் கரைந்தும்! கள்ள சிரிப்பினில் உருகியும்! கடைக் கண்ணின் கரு விழியில் தொலைந்தும்! வளர்க்க நினைத்த என் காதலை என்ன காரணம் சொல்லி நிறுத்துவது....
மழை பெய்த சுவற்றை, காட்டி கொடுத்து விடும் மண்வாசனை போல், நீயில்லாத என்னை இவ்வுலகம் எளிதில் அடையாளம் கண்டு விடும். உன் பிரிவு எனக்கு சுகம்தான், என்று இவ்வாழ்க்கை நாடகத்தில் நானும் நடிக்கத் தொடங்கினேன். விட்டில் பூச்சி அற்ப ஆயூள் கொண்டது, என்று இதுவரை சொல்லிக்கொண்டிருந்த உலகத்தின் பார்வைக்கு என் காதலும் ஒரு புது உவமையானது!
“உன் காதலின் சந்தோசமான தருணங்களை ஆர்வமாக எழுதிய என்னை வைத்து இந்த பிரிவை எழுத சொல்லி துன்புறுத்தாதே” என்று பேனா விதித்த நிபந்தனைக்காக நிறுத்தி கொள்கிறேன்.
உலகில் எல்லா காதல்களும் சுபமாய் முடிவதில்லை. நிறைய காதல்கள் கணினியின் கடவுச்சொற்களுடன் நின்று விடுகின்றன. முற்று பெறாத காதல்கள் கூட, எங்கோ அல்லது ஏதோ ஒரு வகையில் இதுபோல் காவியங்களாகின்றன.
***** முற்றும் *****
:- பிரபாகர் சந்திரன்.