மானம் விற்கும் கடை
சூடான செய்திக்கும் சுவையான செய்திக்கும்
==சுந்தரிமார் படம்போட்டு சொக்கவிடும் முதல்பக்க
ஏடாகக் காட்டுகின்ற பத்திரிக்கை பெண்மானம்
==ஏலத்தில் விற்கின்ற எடைபோடும் தராசாக
நாடெங்கும் காண்கின்றோம் நடைமுறையில் அதைத்தானும்
==நடுவீதி தனில்வைத்து நயமாக விற்கின்ற
கேடான செயலான கேவலத்தைக் கண்ணுற்றால்
==காசினியில் போற்றப்படும் பெண்நிலைமை புரியுமன்றோ
தவறிழைத்த பெண்ணொருத்தி காவலரின் கைதாலே
==தலைகுனிந்து செல்கின்ற சந்தர்ப்பம் தனைப்பார்த்து
கவர்ஸ்டோரி செய்கிறோம் எனக்கூறி புகைப்படத்துக்
==கருவிகளால் ஊடுருவும் கண்கொத்திப் பாம்புகளாய்
சுவர்தாண்ட எத்தனிக்கும் சுதந்திர ஊடகங்கள்
==சுகமாக பெண்தூற்றும் சுயநலத்தின் லாபத்தில்
எவரேனும் கண்டீரோ எழிலான பெண்ணங்கே
==இலகுவாகப் போற்றப்படும் தன்மையதன் உண்மையினை.
சீரழிக்கப் படுகின்ற பெண்ணினத்தின் உண்மையினை
==செகம்முழுக்கச் சொல்லுதற்கு சிரத்தைகொளும் நோக்கமென
மார்தட்டும் ஊடகங்கள் மறைக்கின்ற மானத்தை
==மாட்டில்லா மகிழ்வோடு படம்போட்டுக் காட்டுகின்றக்
கூறுகெட்டச் செயலாலே வாழ்வொன்று கொடுப்பதாகக்
==கூறுகின்ற கொள்கையுள மனிதர்மனம் மாற்றுகையில்
யாருமற்ற அனாதையாக நிற்பதற்கு வகைசெய்யும்
==இயந்திரமாய் ஊடகங்கள் இருப்பதனை அறிவீரோ?
நாடகங்கள் காட்டுவதாய் நாள்தோறும் பெண்ணினத்தை
==நடமாடும் விலைமாதாய் காட்டுதற்கே முன்னிற்கும்
ஊடகங்கள் எனும்கொசுக்கள் உருஞ்சுகின்ற ஆதாயம்
==ஊற்றெடுக்க பெண்வைத்து செய்கின்ற வியாபாரம்
பூடணமாய் அணிவிக்கும் பொல்லாத சீர்கேடு
==பூமியிலே பெருகிவிட, போற்றுவதாய் சொல்லிக்கொண்டு
ஆடுகின்ற மேடையிலே அவமானம் நிலையாக
==அடைமானம் வைப்பதிந்த ஊடகத்து கடைகளிலே
*மெய்யன் நடராஜ்

