வாக்குத் தவறாத நாக்கு

மாளிகை வாசலில் காவலில் இருந்தாலும்
மண்குடில் அருகில் கவலையில் இருந்தாலும்
கூளிகள் கண்டால் குறைத்திடும் “வள் வள்”
குரல்வாக்கு தவறாத நாக்கு நாய்க்கு

எலிகளை பிடிக்கும் மௌனத்தில் இருந்தும்
இணையுடன் சேரும் தவிப்பிலும், எதிரியுடன்
கிலிகொளும் பொழுதும் கத்தும் “மியாவ் மியாவ்”
குரல்வாக்குத் தவறாத நாக்கு பூனைக்கு

விடியலில் வந்திடும் விருந்தா ளிக்காய்
விருந்தென் ஆகப் போவத றியாமல்
கடமை தவறாமல் “கொக்கரக் கோ”வெனும்
குரல்வாக்குத் தவறாத நாக்கு கோழிக்கு

மலடியே என்றாலும் “அம்மா” வென்றே
மனமுவந் தழைக்க மறவா தென்றும்
குலவிடும் அன்புக் குணமது மாறா
குரல்வாக்கு தவறாத நாக்கு பசுவுக்கு

ஒருகுரல் படைத்த ஐந்தறி வெல்லாம்
ஓதும் வேதமாய் உரைத்திடும் ஒலிகளில்
தருகிற சத்தியம் தவறுவ தில்லை
தரக்குறை வான மனிதரை போல

பலகுரல் படைத்த பகுத்தறி வாளன்
படித்திட வேண்டும் என்பதற் காக
விலங்குக லிடத்தே வைத்தா னன்றோ
வாக்குத் தவறா நாக்கினைத் தானும்

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (4-Apr-16, 2:27 am)
பார்வை : 80

மேலே