இளைய தலைமுறைக்கு

நேற்று என்பது கனவு நாளை என்பது கானல்
இன்று என்பது நிஜம் இப்போது என்பது கைவசம்
உன் கையில் இருக்கும் வாய்ப்பு.

நாளை என்பது அதோ
பசுமையாய் வளமையாய் தெரியும்
அதை அதே பசுமையோடும் வளமையோடும்
எதிர்கொள்ள உன்னுடைய இப் பொழுதை
எதிர்கொள், சிக்கெனப் பற்றிக்கொள்.

காலம் என்பது அண்டத்தின் ஒரு புள்ளி
அது நீயும் நானும் இல்லாமலேயே கடக்கும்
கடந்து போகும், கடந்து போய்க்கொண்டே இருக்கும்.
இபோழுது இந்த நொடி என்று
சொல்லி முடிப்பதற்குள் அது
அப்பொழுது அந்த நொடி ஆகிவிடும்.

கடிகாரம் காட்டும் காலத்தை தாண்டி
வேகமாக நகர்ந்தால் மட்டுமே
இன்று என்பது உன் கைவசப்படும்
காலத்தை உன் வசமாக்கினால்
அற்புதங்கள் புரியலாம்
காலம் உன்னை வசப்படுத்தினால்...
அற்ப பதராய் மறைந்தே போவாய்.

நேற்று என்ற கனவை விட்டொழி
இன்று என்னும் பசுஞ்சோலையில் உலாவு
உன்னை சுற்றி இருக்கும் பிரம்மாண்ட உலகை சுவாசி
தலைக்கு மேல் தவழும் மேகத்தின் இசையை கேள்

இன்றைய இப் பொழுதை மட்டும் கண்டு மகிழ்
நாளை என்பது வரலாம் அது கானல்சலம்
இன்று உன் கண்ணெதிரே நிதர்சனமாய்
இப் பொழுதை அறுவடை செய்துவிடு
இருப்பதை பிறருக்கும் அளித்துவிடு
கூட்டி பெருக்கி அளித்துவிடு
வகுத்து பகிர்ந்து கழித்துவிடு.

கற்பனை கயிறுகளால் கட்டுண்டது போல்
கொண்ட பொய்யுறக்கம் விட்டு விழித்துவிடு
உன்னுள் இருக்கும் துணிவை எதிர்கொள்
உறங்கிக்கிடக்குள் நம்பிக்கையை தூண்டிவிடு
வாழும் காலத்தை வெறுமையாய் ஆக்கிவிடாதே
அதை முழுவதுமாய் அர்த்தமுள்ளதாய் ஆக்கிவிடு

ராசியையும் பலனையும் நம்பாதே
ரகசியத்தையும் வசியத்தையும் ஏற்காதே
தந்திரமும் மந்திரமும் உனக்கு உதவாது
மாயமும் தாயத்தும் உன்னை கடத்தாது

உண்மையை கண்டுணரும் சக்தி உன்னிடம்
வன்மையை கண்டிக்குக் யுக்தி உன்னிடம்
உனக்குள் மலையென வேள்வி நடத்து
அதில் கூருணர்வற்ற பண்புகளை காணிக்கை ஆக்கு

கல்லாய் உன்னை பாதாளத்தில் புதைக்காதே
பஞ்சாய் மாறி வானுயர பறந்து விடு
காற்றுவெளியிலிருந்து உன் வாழ்வின்
மாற்று வழி பலவும் தெண்படும்
அவற்றை காணப் பழகு மகிழ்ச்சியுறு
அத்தகைய வாழ்வை வாழ்ந்து காட்டி
உலகின் ஒளிபிழம்பாய் ஒளிர்ந்து விடு.

எழுதியவர் : சுபாசுந்தர் (9-Apr-16, 3:02 pm)
சேர்த்தது : சுபாசுந்தர்
Tanglish : ilaiya thalamuraiku
பார்வை : 122

மேலே