யாரை தேடுகிறாய்
கடவுளை காண அண்ணாந்து பார்க்க தேவையில்லை
ஐயனே அப்பா என்றும் அம்பிகையே அம்மா என்றும்
அலறவும் தேவையில்லை...
பசியால் வாடுபவனுக்கு ஒரு கவளம் சோறு கொடுப்பவன் கடவுள்
படிப்பறிவுக்கு ஏங்கும் ஒரு குழந்தைக்கு அறிவு புகட்டுபவன் கடவுள்
தன் சித்தம் பிசகி நிற்கும் மக்களுக்கு தோள் கொடுப்பவன் கடவுள்
நோயாளிக்கு நோய் விலக்கி உயிர் பிடித்து தருபவன் கடவுள் தான்.
நம்பிக்கையாய் வேலை தேடும் ஒரு இளைஞனுக்கு வேலை கொடுப்பவன் கடவுள்
தெருவோரம் வாடும் ஜீவன்களுக்கு துணியும் துப்பட்டியும் கொடுப்பவன் கடவுள்
ஊன் கொடுத்து உயிர் கொடுத்த தாயும் தந்தையும் பாட்டன் பாட்டிகளும் கடவுள்
நம் இறுதி ஊர்வலத்தில் தோள் கொடுக்கும் அந்த நால்வரும் கூட கடவுள் தான்.
இதை உலகுக்கு எடுத்து சொல்ல
எங்கும் சக்தி என்று முழங்கும் யாரும் வேண்டாம்
எதிலும் மனிதமென கூவிடும் ஆரும் வேண்டாம்.
உண்மையை கடவுள் என்று கூறும் ஒரு கூட்டம்
அந்த உண்மையையே மறுத்துவிட்டு உலவுகிறது
கடவுள் மட்டுமே உண்மை என்று மற்றொரு கூட்டம்
வன்மையை காட்டி மிரட்டி மேய்கிறது.
கோவில் குளங்களில் தேடும் கடவுளை
உன் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் தேடு
மலை மேடுகளில் தேடும் கடவுளை
மண் குடிசைகளின் அருகே தேடு.
மண்ணில் விழுந்தது முதல் விண்ணிற்கு மீளும் வரை
நம்மோடு நம்மிடையே நம்மருகே நமக்குள்ளே
இருக்கும் கடவுளை விடுத்து
எங்கே யாரை தேடுகிறாய்?