ஒரு மூங்கிலின் துளைகளில்

முள்கிரீடங்களை
சுமந்த பிறகே
சிரசிலிருந்து வழியும்
ரத்தங்களில் இருந்தே
சில பயணங்களின் பாதைகளும்
தூரங்களும்
வரைபடமாக்கப்பட்டன ..
உங்களால் !

தொலைந்து போன
திறவுகோல்களுக்கு
தெரியாது
உடைக்கப் பட்ட பூட்டுகளின்
வலியும் வேதனையும் ..
இணை பிரிந்த ஒன்றைத் தவிர
அவைகளுக்கு
இழப்பதற்கு ஏதும் கிடையாது
அவை பயனற்றுப் போவதால்
நட்டமொன்றுமில்லை
வீடுகளின் கூரைகளே
எடுத்தெறியப்பட்ட பின்பு !

தொடர் ஓட்டத்தில்
ஒருவனின் ஓட்டத்தை
இன்னொருவன் தொடர ..
வெற்றிகள்
நிச்சயமற்றுத்தான் போகின்றன
பெருவலியை
அதிலொருவன் பெறும்போது ..!

முள்ளும் கல்லும்
குத்திக் கிழித்த சதையோடு
ரணங்களை தாங்கி ஏறிய
செங்குத்தான மலைப்பாதையில்
கல்பொறுக்க
காற்றோட்டமாய் போகிறான்
என்று பொருள் கொள்ள
இரவல் சிறகுகளோடு
எகிறிப் பறந்து விடுகிறது
எதிர்த்திசையில்
உங்கள் இதயத்தின் மூலைகளில்
உறைந்திருந்த ஈரம் !

இரண்டடுக்கு வீட்டின்
மொட்டைமாடி
எறும்புக்கு இமயமாகும் !

தோகையின் ஓரிழை இழத்தல்
மயிலுக்கு ஒன்றுமில்லை ..
பள்ளிக் குழந்தைக்கோ
அதுவோர் பரவசம்
என்பதால் ..
புத்தகத்தின் நடுவில் வைத்து
பாதுகாக்கும் !

நியமங்களின் ..
கோட்பாடுகளின்.. வழியினில்
நீர்வார்க்கப் படாத ..
பட்டுப் போன செடிகள்
பார்த்தீனியங்கள்
பரவியிருக்கின்றன
உங்கள் தோட்டமெங்கும் ..!

நச்சுக் காற்று மண்டலத்தின் நடுவில்
நந்தவனங்கள்
நீரின்றியும் துளிர்க்கட்டுமே ..
நச்சு நீக்கும்
நல்ல மூச்சுக் காற்றால் ..!

அதுவரை ..
ஒரு மூங்கிலின் துளைகளில்
உள்ளும் புறமுமாக
நுழைந்தபடி நாதமாகத்தான்
இருந்து விடுங்களேன்..!

எழுதியவர் : கருணா (16-Apr-16, 7:28 pm)
பார்வை : 136

மேலே