எண்ணங்களின் பயணம்
உயிர் உள்ள சொற்கள்
தேடி உயிர் விட்டுக்
கொண்டிருந்ததொரு
கவிதை
மனவெளியில்
எண்ணச்
சருகுகள்
அங்கங்கே
சிதறிக் கிடைக்க
தனிமைக் கதவின்
தாழ்ப்பாள் திறந்து
நினைவெனும்
தாழ்வாரங்களில்
நிலையில்லாது வழியும்
ஞாபக மழையில்
நனைந்து கொள்கிறேன்.
கனவெனும்
தட்டாம் பூச்சி
சிறகு வழி வானம்
வரை உயர்கிறேன்.
வான் தொடும்
விருட்சங்கள் எழுதி
முடிக்கா கவிதைகளில்
படிக்க மறந்த
சொற்களை காற்றிடம்
கடன் வாங்கிக்கொள்கிறேன்
ஈரப் புற்களில்
இழையும் துளியில்
ஓவ்வோர் சொற்களையும்
கோர்த்துக் கொள்கிறேன்
உயிர்த்துக் கொள்கிறது
ஒவ்வோர் வரிகளும்
கவிதையாய்..
எங்கிருந்தோ
வந்த தென்றல்
மொழி பெயர்த்துப் போன
என் கவிதை இப்போது
ஒவ்வோர் வாசலிலும்
முல்லைப் பூக்களாய்
இறைந்து கிடக்கிறது..