தமிழ் நாட்டில் தேர்தல்
தேர்தல்
அஞ்சுஅஞ்சு வருஷந்தோரும். அரங்கேறும் விந்தையே !
நாட்டுமக்கள் ஓட்டுரிமை விலைபோகும் சந்தையே !
கட்டுக்கட்டாய் கைமாறும் ரூபாய்நோட்டுக் கத்தையே !
கோடிமக்கள் ஏமாறும் மோடிமஸ்தான் வித்தையே !
கட்சிகள்
சாதிமத பேதங்கள். இல்லையெனச் சாற்றினும்
நாகர் கோயில் போட்டியிட நாடாரையே. நாடுவார்'
மதுரையிலே போட்டியிட தேவரையே தேடுவார்.
கடலூரில் வன்னியர் ! மீதிப்பேர் அன்னியர் !
இன்றுஒரு கூட்டணி; நாளைவேறு கூட்டணி
இந்தநாளில் அரசியலில் ஈதெல்லாம் சகஜமே !
கொள்கைகளும் கொலையாகும்! வாக்குவங்கி விலைபோகும்!
எள்ளளவும் இல்லையே , யாருக்கும் வருத்தமே !
வேட்பாளர்கள் - தேர்தலுக்கு முன்னும் பின்னும்
சந்துபொந்து தோறும்வந்து வாய்கிழியப் பேசுவார்
வந்துநின்று வக்கணையாய் வார்த்தைகளை வீசுவார்.
முந்திசொன்ன வாக்குறுதி பற்றியாரும் கேட்பறேல்
முறையாகப் பேசாமல் சுற்றிமெழுகிப் பூசுவார்.
வீடுதோறும் வாசல்ஏறி வந்தனங்கள் செய்யுவார்.
தேடிவந்து கைகுலுக்கி ஒட்டுவேட்டை ஆடுவார்
ஓட்டுப்பெட்டி நிறைந்ததுமே ஒதுங்கியோடிப் பதுங்குவார்
நாட்டுமக்கள் இவர்களையே நம்புவதும் எங்கனம் ?
வாக்காளர்கள்
பாலும்தேனும் நாட்டிலே பெருகிஓடும் அதனுடன்
பலவிதமாய் இலவசங்கள் பெற்றிடுவீர் என்றெலாம்
அவிழ்த்துவிடும் கதைகள்கேட்டு குழம்பிடுவார் சிந்தையே
யாரெவரையும் தலையாட்டி நம்பும்ஆட்டு மந்தையே
.
கஞ்சிகுடித்து கந்தலுடுத்தும் குடிசைவாழும் மக்களும்
கஞ்சிபோட்ட உடையுடுத்தி காரில்போகும் மக்களும்
கொஞ்சம்கூட அஞ்சிடாமல் கட்சிசொல்லும் பொய்களை
நம்பிஒட்டு போடுறார் ! நாசமாகப் போகிறார்
வேறு சிலரோ ,
ஓட்டுப்போட்டு மையைத்தடவ கையைக்காட்டும் முன்னரே
நோட்டுவாங்கி பையில்போட கைகளையே நீட்டுவார்.
காந்தியாரே இங்குவந்து வேண்டிஒட்டு கேட்டினும்
காந்திபடத்தை போட்டநோட்டு காட்டுமுதலில் என்பரே
வேட்பாளர் வெற்றி பெற்று சட்டசபை சென்றபின் .
விதவிதமாய் கையூட்டு கூசாமல். வாங்குவார்!
சதவீதம் பெற்றேயெக் காரியமும். செய்யுவார்!
சுனாமிகள் புயல்மழைக்கு அரசின் நிவாரணம்
பினாமியாய் இவர்களுக்கு பாதிபோயே சேரணும் .
தேர்தலிலே வெற்றிபெற்று சட்டசபை. சென்றபின்
சொத்துபத்தும் உடமைகளும் பத்துமடங்கு பெருகுமே
எங்கிருக்குது சுவிஸ்சர்லண்ட் என்பதும் தெரியாமலே
அங்குள்ள வங்கிகளில் தங்கமாய் பதுக்குவார்.
நாம் ஏங்குவது ---
மக்கள்நலனை மட்டும்நாடும் கட்சிஒன்று தோன்றுமோ?
கக்கன்காந்தி காமராஜர் போன்றதலைவர் கிடைப்பரோ? ?
ஓட்டைவிற்க மக்கள்மறுக்கும் காலமென் றுதிக்குமோ
நாட்டைஆள நல்லஆட்சி இன்றுநாளை நேருமோ?