அன்னையர் தினம்
கருவறை சுமந்தாய் - இனி
கல்லறை வரையுனைச்
சுமக்கும் வரம்தா
ஈரைந்து திங்கள் உன்னுள் வாசம் - இனி
இருக்கும் வரையிலென் மனை
தங்க வரம்தா
பிள்ளைகள் உடல் நலம்
பேணிக் காக்க நீ
நித்தம் ஊட்டிய அழகே தனி தான்
வாரம் தோறும் தவறிவிடாத உன்
எண்ணைக் தேய்ப்பும்
அன்பின் சான்றே
ஒருபடி நீயும் உன்னைத் தாழ்த்தி
கடைதனில் வியாபாரம்
பார்த்ததும் எனக்கே
அளவிலாது நான் தவறுகள் செயினும்
அன்பின் மிகையால்
மன்னித்து மறந்தாய்
உன்னுழைப்பை யெலாம் சூறையாடினும்
அமுத சுரபியாய்
அள்ளிக் கொடுத்தாய்
வலிப்பு நோயின் வாயினுள் நின்றே
பிரியாணி சமைத்து
எனக்குக் கொடுப்பாய்
உனக்காய் சேர்த்த சொத்துக்களனைத்தும்
கிழிந்த புடவையும்
தீரா நோயுமே
காலன் நான்கில் ஒன்றைப் பறித்தபோதும்
மிஞ்சிய எமக்காய்
நெஞ்சுரம் கொண்டாய்
மண்ணகம் விண்ணகம் முழுதும் தேடினும்
தாயின்றி பிறந்தோன் யாருமிலன்
என் கடவுள் சேர்த்து
ஒற்றை நாளின் கொண்டாட்டமல்ல - நான்
மக்கிப் போயினும் தினம் தொடரும் திருநாள்
அன்னையர் தினம்!!!