நினைத்தது நடந்தது

நினைத்தது நடந்தது.....!!! (குட்டிக்கதை )
`````````````````````````````````````````````````````````````
முகிலனுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. லடாக்கின் உறைய வைக்கும் குளிர் கூட தகித்தது. மிலிட்டரி ஆபீசரிடம் இரண்டு வாரம் லீவ் கேட்டிருந்தான் .

“தலை தீபாவளிக்கு சுகுணாவுக்கு கிளி பச்சைக் கலர்ல அரக்கு பார்டர் போட்ட பட்டுப்புடவை எடுத்துக் கொடுக்கணும் . அவ செவத்த உடம்புக்கு எடுப்பா இருக்கும் “

அவன் ஆசைக்கு ஒரு பிரேக் போட்டார் ஆபீசர்.

“முகிலன் ! நீங்க அடுத்த மாசம் வேணும்னா லீவ் எடுத்துக்குங்க.... இப்ப லீவ் கொடுக்க முடியாது “

தாய்மண்ணைக் காக்கும் பொறுப்பை பெருமையாய்க் கருதும் முகிலன் சோர்ந்து போனான்.

அன்று தீபாவளி. சாப்பிடக்கூட பிடிக்கவில்லை முகிலனுக்கு. நினைவெல்லாம் கிராமத்தில் இருக்கும் சுகுணாவையே சுற்றிச் சுற்றி வந்தது. விழியோரம் கசிந்தக் கண்ணீர் உறைந்துக் காய்ந்துப் போக தன்னை மறந்து உறங்கிப் போனான்.

காலை பத்து மணிக்கு மொபைல் சிணுங்கியது. சுகுணாவிடமிருந்து கால்.

“மாமா ! எப்படியிருக்கீங்க ? நான் காலைல நோன்புக்காக எல்லை காளியம்மன் கோயிலுக்கு அத்தையோடு போயிருந்தேன் . பூசாரி எனக்கு காளியம்மனுக்கு சாத்திய பட்டுப்புடவை கொடுத்தார் மாமா ! கிளிப்பச்சக் கலர்ல அரக்கு பார்டர் போட்டது .....நீங்க எப்ப மாமா வருவீங்க .....?”

கேட்டுக் கொண்டே இருந்த முகிலன் கண்கள் குளமாயின.

“ நாட்டு எல்லையக் காக்குற பணியில் இருக்குற என் மனசப் புரிஞ்சிக்கிட்ட எல்லைக்காளியாத்தா என் ஆசைய நிறைவேத்திட்டாளே...!!” கண்ணீரைத் துடைத்துக் கொண்டு புத்துணர்ச்சியோடு பணிக்குத் தயாரானான் .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (18-Apr-16, 8:41 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 192

மேலே