உள்ளதா வயதிற்கும் உச்சவரம்பு

உழைத்தால் உயர்வர் என்றும்
--உழைப்பவரே உத்தமர் என்றும்
உரக்கச் சொல்லிடுவார் அன்றும்
--உண்மையென கூறுவார் இன்றும் !
உள்ளதா வயதிற்கும் உச்சவரம்பு
-- உழைப்பதற்கு உலகில் நீஇயம்பு !
உள்ளதா உயர்வும் உழைப்பிற்கு
--உண்மையை கூறிடு நீஇதற்கு !
ஒருசிலரே உதாரணம் அதற்கு
--ஒப்புக் கொள்வர் பலருமிதற்கு !
எதிராக கூறவில்லை உழைப்பிற்கு
--எதார்த்த நிலையிது உணர்ந்திடு !
உழைப்பால் உருமாறிய முதியவர்
--உள்ளத்தால் தளராத மூத்தவர் !
அகவை உயர்ந்தாலும் அயராதவர்
--அகத்தால் இரும்பாய் இருப்பவர் !
மூப்பால் முதிர்ந்தும் சோர்வின்றி
--மூவேளை உழைத்திடும் உள்ளம் !
நின்றிடும் நிலையே காட்டுகிறது
--நிச்சயம் உழைக்கும் உருவமிது !
உழைத்திடா உயிர்களும் உய்க்கிறது
--உள்ளவரை இயன்றதை சுருட்டுகிறது !
சுரண்டிப் பிழைக்கின்றனர் மக்களிடம்
--சுயநலமுடன் வாழ்கின்றனர் பலரும்!
குவியும் செல்வத்தில் உறங்குகின்றனர்
--குனிந்தே உழைக்காத உத்தமர்சிலர் !
மிதிக்கின்றனர் மயக்கத்தில் மற்றவரை
--மிதக்கின்றனர் சுகத்தில் இறுதிவரை !
பாடுபடும் விவசாயியோ பாதாளத்தில்
--பாட்டாளி வர்க்கமோ பாலைவனத்தில் !
ஏற்றம்பெறா ஏழையும் ஏக்கத்தில்
--ஏனிந்தநிலை இன்னும் வையகத்தில் !
உழைக்கும் சமுதாயம் உயர்வடைந்து
--உழைப்பவர் உள்ளம் மகிழ்ச்சியுற்று
உற்சாக பெருவெள்ளம் பெருக்கெடுத்து
--உள்ளவரை ஆனந்தமுடன் வாழட்டும் !
பழனி குமார்