எண்ணப்பறவைகள் மட்டும்

ஒரு நீர்த்தேக்கம்
ஓராயிரம் கதை சொன்னது ..!
தன்னிடம்
உயிர்ப்பிக்க
கருவறை இருக்கிறதென்று
அதன் அலைகள்
அவ்வப்போது காற்றிடம்
ரகசியமாய் பேசும்....!

தன்னை
அணைத்துக் கொண்டிருக்கும்
கரைகளிடம் காதலர்களின்
இறுக்கமான நிகழ்விடங்களை
நினைவு கூறும் !

தன்னிடம்
கடந்தகால நினைவுகளை
பகிர்ந்துகொண்ட
வயோதிகர்களின்
மனநிலையை மரங்களின்
நிழலிடம் பகிர்ந்துகொள்ளும் !
தன்னிடம்
தாகம் தணித்துக்கொண்ட
பறவைகள், விலங்குகள் ....ஏன்
மானுட வர்கங்களைப் பற்றி
தாமரை மலர்களிடத்து
பெருமையுடன் பறைசாற்றும் !

தன்னிடம்
தூய்மைப் படுத்திக்கொண்ட
உயிரினங்களின் மேன்மையை
நீந்தும் மீன்களிடம்
அன்றாடம்
சொல்லி சொல்லி அங்கலாய்க்கும் !

ஆனால் இன்றோ .....
பாளம் பாளமாய் வெடித்த
தரையோடு வானம் பார்த்தபடி
தவமிருக்கும் அந்த
நீர்த்தேக்கத்தில் எனது
எண்ணப்பறவைகள் மட்டும்
அமர்ந்தபடி கானல் நீரை
அருந்திக்கொண்டிருந்தன ...!.

....கா.ந.கல்யாணசுந்தரம்.

எழுதியவர் : கா.ந.கல்யாணசுந்தரம் (24-Apr-16, 3:38 pm)
பார்வை : 70

மேலே