கோடைவிடுமுறை

கொளுத்தும் வெயிலும் வந்தாச்சி
கோடையில் விடுமுறை விட்டாச்சி
கொண்டாட்டம் எங்கும் உண்டாச்சி
வண்டாட்டம் பிள்ளைகள் பறந்தாச்சி

சீக்கிரம் எழுந்திடத் தேவையில்லை
சீருடை அணிந்திடத் தேவையில்லை
பாடங்கள் படிக்கத் தேவையில்லை
பரீட்சையும் எழுதத் தேவையில்லை

காலையில் பையைத் தூக்கிச்சென்று
மாலைவரை அடைபடும் துயரமில்லை
வீட்டுப்பாடம் எழுதிடும் வேலையில்லை
விருப்பம்போல் இருந்திடத் தடைகளில்லை

விளையாட அனுமதிக் கேட்கவேண்டாம்
விடிகாலை எழுந்து படிக்கவேண்டாம்
மணியோசைக் கேட்டு ஓடவேண்டாம்
மதியத்தில் சத்தணவு உண்ணவேண்டாம்

மாலைநேர சிறப்பு வகுப்புமில்லை
மண்டியிடும் தண்டனை ஏதுமில்லை
வாத்தியார் திட்டிடும் நிலையுமில்லை
வரிசையில் நின்றிடும் பிரேயரில்லை

உல்லாசப் பயணங்கள் சென்றிடலாம்
ஊர்களும் பலசுற்றிப் பார்த்திடலாம்
உறவினர் வீட்டுக்கும் போய்வரலாம்
பறவைகள் போலவே பறந்திடலாம்

விடுதியில் தங்கிடும் வேலையில்லை
வார்டன் விரட்டிடும் நிலையுமில்லை
நண்பர்கள் துணையுடன் சுற்றிடலாம்
நன்றாகக் கோடையைக் கொண்டாடலாம்

பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : சொ.பாஸ்கரன் (25-Apr-16, 11:41 pm)
பார்வை : 73

மேலே