தீயசெயல்கள் தீயாகிறது
தாய்ப்பால் தேடும் பாலகனுக்கு
தாகம்தீர்த்திட மதுகொடுக்கும் உலகமிது
வேடிக்கையின் விளையாட்டா - இல்லை
விபரீதத்தின் அத்திவாரமா புரியவில்லை
பச்சைமரத்தாணிபோல் பதிந்திடும்
பாதகங்களற்ற செயல்கள் மறந்து
வளரும் முளையினை தளிரும்போதே
நஞ்சூட்டுகின்ற வக்கிரங்கள்
தாயின் மார்பில் அருந்திய அமுத விவேகத்தில்
தனைமறந்த குழந்தை கவ்வும்போது
தலைமீது தட்டிவிட்ட தாயின் செயல்
தழும்பாய் நிலைகொள்கிறது சிசுவுக்கு
மது புகை மாது சூது களவென
அத்தனை பழக்கங்களும் சாதாரணமாய்
குழந்தைகளின் இடைநடுவே அரங்கேற்றி
இளமனதுக்குத் தீயிடுகின்றனர்
சினிமாவின் கவர்ச்சியில் மயங்கி
காமத்தின் கழியாட்டங்களையும்
வயதுவித்தியசம் தவிர்க்கமறந்து
தம்குழந்தைக்கும் விரகதாபம்
உருவாக்கி உருக்குலைக்கின்றனர்
இத்தனை தீகளுக்கு நடுவே
இடைவிடாத இன்னலுற்று
வளர்ந்துவந்த மனிதனால்
சமூகமெங்கே நன்மைபெறும்
குழந்தைக்கு சுதந்திரம்
அவனின் முன்னேற்றத்திற்காய்
அமைந்திடட்டும்
குழந்தையின் முன்னால் எம் செயல்கள்
குழந்தைக்காய் மாறும்போது
நாளை நல்லதொரு செல்வம் அடைந்திடலாம்